Published : 15 Aug 2023 01:19 AM
Last Updated : 15 Aug 2023 01:19 AM

சதுரகிரி கோயிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா - கூடுதல் நேரம் அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்வதற்கு பிற்பகல் 12 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டதால்  தாணிப்பாறை நுழைவு வாயில் முன் காத்திருந்த பக்தர்கள்.

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு கூடுதல் நேரம் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 முதல் 17-ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நாட்களில் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயிலில் இருந்து காலை 5:30 முதல் பிற்பகல் 12 வரை மட்டுமே மலையேற அனுமதி, இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பக்தர்களின் வசதிக்காக மதுரை, கல்லுப்பட்டி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாணிப்பறைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக தாணிப்பாறை விலக்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிவாரத்திற்கே சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

பிற்பகல் 12 மணிக்கு மேல் மலையேற அனுமதி வழங்கப்படாததால் தாமதமாக வரும் பக்தர்கள் மலையேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பிற்பகல் 2 மணி வரை மலை ஏறுவதற்கு அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x