Published : 15 Aug 2023 12:50 AM
Last Updated : 15 Aug 2023 12:50 AM
சிவகாசி: 'நீட் விலக்கு மசோதா குறித்த ஆளுநரின் பேச்சு அவரது அகங்காரத்தை காட்டுகிறது. ஆளுநர் ரவியின் பேச்சு தமிழகத்தில் மோடி மீதான வெறுப்பை ஒருங்கிணைக்கும்' என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார்.
சிவகாசியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், சிவகாசி எம்எல்ஏ அசோகன் ஆகியோர் மீனம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் கூறியதாவது, "மாணவர்கள் மத்தியில் ஜாதி மற்றும் பிரிவினை உணர்வு வராமல் தடுப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. நாங்குநேரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் தமிழகத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெறுப்பு அரசியலின் மையமாக இருக்க கூடிய பல அமைப்புகள் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி குளிர்காய நினைக்கிறது. மாணவர்களிடையே வளரும் வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலானது தமிழக வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நீட் விலக்கு மசோதா குறித்த ஆளுநரின் பேச்சு அவரது அகங்காரத்தை காட்டுகிறது. ஆளுநர் ரவியின் பேச்சு தமிழகத்தில் மோடி மீதான வெறுப்பை ஒருங்கிணைக்கும். ஆளுநரின் அநாகரிக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பட்டாசுத் தொழிலை தொடர்ந்து 9 ஆண்டுகளாக சீர்குலைத்தது பாஜக அரசு. அதிலிருந்து எழ முடியாமல் சிவகாசி தத்தளித்து வருகிறது. சிவகாசி பட்டாசு தொழில் உலக அளவில் செல்ல முடியாமல் ஏற்றுமதி மண்டலங்கள் அமைக்காமல் பாஜக அரசு தடை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் பட்டாசு மீதான தடையை நீக்க பாஜக அரசு முன் வருமா என்பதை அண்ணாமலை தெரிவிக்க வேண்டும். பட்டாசுக்கு எதிரான கட்சி பாஜக. மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் பட்டாசு தொழில் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு வளர்ச்சி வேகமெடுக்கும்.
சிவகாசியில் ஒரு ரயிலை நிறுத்துவதற்கு கூட இரு எம்பிக்கள் மற்றும் ஒரு எம்எல்ஏ மறியல் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அண்ணாமலையை மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக யாத்திரை நடத்தப்படுகிறது. ரயில்வே மேம்பாலம் பணியில் சில செயலாக்க பிரச்சினைகள் இருப்பதால் அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் தொடங்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT