Published : 14 Aug 2023 11:34 PM
Last Updated : 14 Aug 2023 11:34 PM

தமிழக அரசின் இளைஞர் விருதுக்கு மதுரை எழுமலையைச் சேர்ந்த 22 வயது சமூக சேவகி தேர்வு

தமிழக அரசின் மாநில இளைஞர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எழுமலையைச் சேர்ந்த சமூக சேவகி செ.சந்திரலேகா.

மதுரை: தமிழக அரசின் சமூக சேவைக்காக வழங்கப்படும் மாநில இளைஞர் விருதுக்கு எழுமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி செ.சந்திரலேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் எழுமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மு.செல்வராஜன்-பசுபதி ஆகியோரின் மகள் சந்திரலேகா (22). முதல் பட்டதாரியான இவர் சமூக சேவைக்காக தமிழக அரசின் மாநில இளைஞர் விருதினை தமிழக முதல்வரிடம் நாளை (ஆக.15) பெறுகிறார். இயற்கை வளம், சுற்றுச்சூழல் மேம்பாடு, ஆதரவற்றோருக்கு சேவை, பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு என பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டதற்காக நடப்பாண்டு விருதுக்குரியவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருமாத்தூரிலுள்ள கருணை இல்லத்தில் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து விருது பெறவுள்ள சந்திரலேகா கூறியதாவது: எனது பெற்றோர் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். விவசாயியான எனது தந்தை எப்போதும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். பிளஸ் 2 படிக்கும்போது திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்றேன். அப்போது யாசகம் கேட்போரில் எல்லோரும் காசு, பணம் கேட்டனர். ஆனால், ஒரு பெண் மட்டும் சோறுவேண்டும் எனக்கேட்டது என் மனதை வாட்டியது. பின்னர் அவரது கிழந்த உடையை மாற்றி உணவு வாங்கித்தந்தேன்.

அன்றிலிருந்து சொந்தங்களால் கைவிடப்பட்டோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதற்காக தடகள விளையாட்டு வீரரான நான் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பசுமலை மன்னர் கல்லூரியில் சமூகப்பணியில் எம்ஏ முடித்துள்ளேன். உளவியல் தொடர்பாக டிப்ளமோவும் படித்துள்ளேன். தொடர்ந்து சமூக சேவையாற்றிவருகிறேன். தமிழக முதல்வரிடமிருந்து பெறும் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையையும் ஆதரவற்றோருக்கு அளிக்கவுள்ளேன். இதுவரை சுமார் 5300 நாட்டுவகை மரங்களை நடவு செய்து பராமரித்து வருகிறேன். நீர்நிலைகளில் 2500 பனை விதைகள் நட்டுள்ளேன். ஆதரவற்ற முதியோர்கள் இல்லாத சமுகத்தை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x