Published : 14 Aug 2023 05:00 PM
Last Updated : 14 Aug 2023 05:00 PM
புதுச்சேரி: "எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள். நீட் தேர்வில் பலர் வெற்றி பெற்று மருத்துவர்களாக வருகின்றனர். இது மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது" என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை நாளை கொண்டாட இருக்கின்றோம். அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் சொன்னது போல டிவிட்டர் முகப்பில் நாம் தேசியக் கொடியை வைப்போம். ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம். நமது தேசப்பற்றை சொல்லும் நிலையில் இருக்கின்றோம். பலரின் தியாகங்களால் இதை பெற்றிருக்கிறோம்.
எல்லா வகையிலும் புதுச்சேரி பல முன்னேற்றங்களை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது. எப்படி பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இந்தியா ஆகப்போகிறதோ, அதேபோல் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும், சுகாதாரத்திலும் புதுச்சேரியும் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு அத்தனை முயற்சிளும் மேற்கொள்ளப்படுகிறது.
அரசாங்கத்தில் நடைபெற வேண்டிய விழாக்கள் சிறப்பாக நட்புணர்வோடு நடைபெற வேண்டும். தெலங்கானாவில் நான் கூடும் விழாக்களுக்கு முதல்வர் வருவதில்லை. ஆனால் அதனை கவலையோடுதான் நான் எதிர்கொள்கிறேன். கருத்து மோதல்கள், கருத்து பரிமாற்றங்கள் இருக்கலாம். ஒருவர் கருத்தை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்தைத்தான் ஒருவர் சொல்ல வேண்டும் என்பதும் இல்லை. ஆனால், நாம் இப்படி ஒவ்வொரு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை, ஒரு நட்புணர்வை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் எதிர்வரும் இளைய சமுதாயத்துக்கு எதைச் சொல்ல வருகின்றோம் என்ற ஆழ்ந்த கவலை எனக்கு இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் எவ்வளவு மாற்றுக் கருத்து இருந்தாலும், அரசின் விழாவின் வழிமுறை என்று வரும்போது அதனை பின்பற்றுவது தான் சரியாதாக இருக்கும்.
நீட் தேர்வை முதலில் இருந்தே நான் ஆதரித்தேன். புதுச்சேரியில் சாதாரண மாணவர்கள் பலர் என்னை வந்து சந்தித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்று சொன்னார்கள். ஆனால், நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது. தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் நீட் தேர்வை விலக்குவோம் என்று சொன்னார்கள். நீட் தேர்வை விலக்க முடியாது என்று தெரிந்தே பொய் வாக்குறுதியைத்தானே கொடுத்தார்கள். மாணவர்களை படிக்க விடாமல் ஏமாற்றியது யார்? நீட் தேர்வில் விளக்கு அளிக்க முடியாது என்பது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. ஏன் இது தொடர்பாக வழக்காடு மன்றம் செல்ல மறுக்கின்றனர். ஆகவே நீட் தேர்வை வைத்து எல்லோரும் விளையாட வேண்டாம். மாணவர்களை படிக்க விடுங்கள். எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துகளை மட்டும் பரப்பாதீர்கள்.
இன்று பலர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர்களாக வருகின்றனர். இது மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவக் கல்லூரி வைத்திருக்கும் மிகப்பெரிய செல்வந்தரின் பிள்ளைகள் கூட நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை என்றால் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியாது. எப்போதும் ஆரம்பிக்கும்போது சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். எல்லாவற்றுக்கும் நுழைவுத் தேர்வுகள் வந்துவிட்டது. இந்தியா முழுவதும் பல பதவிகள், உயர்கல்வி பெற வேண்டும் என்றால் 83 வகையான நுழைவுத் தேர்வுகளை ஒரு குழந்தை எழுதுகிறது. அப்படி இருக்கும்போது மருத்துவக் கல்லூரிக்கும் ஒரு நுழைவுத் தேர்வு தேவைதான்.
இன்றைய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்றால் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு எழுதுவது போன்று, மருத்துவத்துக்கும் நுழைவுத் தேர்வு அவசியம். இன்று மாணவர்கள் வெற்றி பெற ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக வெற்றி பெருகின்றனர். தயவு செய்து மாணவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து விடாதீர்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தாக்கப்பட்டார் என்பது உண்மையான சரித்திரம், வரலாறு'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT