Published : 14 Aug 2023 03:18 PM
Last Updated : 14 Aug 2023 03:18 PM

நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் தரவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: "தமிழகத்தில் கூட்டணியுடன் கூடிய 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக, இதுவரை ஒருமுறைகூட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை செல்வசேகரும் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இருவரையும் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய பொம்மை முதல்வர் ஸ்டாலினும், அவரது அருமைப் புதல்வரும் தேர்தல் சமயத்தில், எப்படியாவது தமிழகத்தில் ஆட்சிப் பீடத்தில் அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி, பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்தனர். அதில் ஒன்றுதான் `நீட் ரத்து’ என்ற போலி வாக்குறுதி.

முதன் முதலில், நீட் தேர்வு பயத்தால் அன்று அரியலூர் மாணவி அனிதா தனது இன்னுயிரை இழந்த நிகழ்வில், ஆட்சி அதிகாரம் என்ற சுய லாபத்துக்காக அரசியல் நடத்திய திமுக, தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையின்போது, ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்; நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள், அதன் சூட்சமம் ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று திமுகவின் இளைஞர் அணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர்கள் வரை தேர்தல் மேடைகளில், அதிமுக அரசுக்கு எதிராக வெற்று முழக்கமிட்டு, மாணவர்களையும், மக்களையும் திசை திருப்பி வெற்றியும் பெற்றுவிட்டனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து அதிமுகவின் அரசு நடத்திய நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்களின் போதும், அதை கேலி செய்து, வக்கனை பேசியது திமுக. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக அரசு நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தீர்மானம் இயற்றியது போல், இவர்களும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றினர். நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தனர். மீண்டும் ஆளுநர் கையொப்பம் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருப்பதாக தம்பட்டம் செய்வதைத் தவிர, நீட்-க்கு எதிராக இவர்கள் ஒன்றையும் செய்யவில்லை.

தமிழகத்தில் கூட்டணியுடன் கூடிய 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக, இதுவரை ஒருமுறைகூட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை.நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு விளையாடி வரும் இந்த நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்கள், இன்னும் எத்தனை உயிர்களைத்தான் பலிவாங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. குறைந்தபட்சம் 40-க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த பல இணையான படிப்புகள் உள்ளன. எனவே, நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலில் தங்களது இன்னுயிரை போக்கிக்கொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம் என்று, எனதருமை மாணவச் செல்வங்களையும், பெற்றோர்களையும் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் கிராமப்புற மாணாக்கர்கள் மற்றும் ஏழை மாணாக்கர்கள் ஆவார்கள். எனவே, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததுடன், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையும் ஏற்படுத்தித் தந்தேன். அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு மூடுவிழா செய்யப்பட்டதை அறிந்தவுடன், நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஸ்டாலினை, உடனடியாக மீண்டும் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி இருந்தேன். ஆனால், மருத்துவத்தோடு சம்பந்தப்பட்ட இணை படிப்புகள் பற்றிய விவரங்களோடு மாணாக்கர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தன்னம்பிக்கை பயிற்சியை அளிக்கவும், நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியை அளிக்கவும் இந்த திமுக அரசு தவறிவிட்டது.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும், பொய் பேசி ஏமாற்றும் வித்தையை விட்டுவிட்டு, இனியாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, அதற்கு உண்டான வழிமுறைகளை செயல்படுத்தி, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தீர்வு காண திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x