Published : 14 Aug 2023 03:03 PM
Last Updated : 14 Aug 2023 03:03 PM

நீட் பிரச்சினை | “ஆளுநர் வேறு ஓர் உலகில் இருக்கிறார்” - மாணவரின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "ஆளுநர் வேறு ஓர் உலகத்தில் இருக்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில், அவர் தமிழக மக்களின் மனநிலையை சுத்தமாக அவர் புரிந்துகொள்ளவே இல்லை. இந்த நான்கைந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட 20 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். ஆளுநர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு தோல்வியால் தனது மகன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வசேகர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "நீட் தேர்வால் தொடர்ந்து பல மாணவர்களை பலி கொடுத்திருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வில் இரண்டு முறை முயற்சித்து தோல்வி அடைந்துவிட்டதால், தன்னுடைய மருத்துவ கனவு பறிபோய்விட்டதால், மாணவர் ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.

நீட் தேர்வுக்காக இதுவரை மாணவர்களைத்தான் பலி கொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போது மாணவர்களின் குடும்பங்களையும் பலி கொடுக்கிறோம். ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்துகொண்டார். அவர்களது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க எனக்கும் தெம்பு இல்லை. இந்த நீட் தேர்வால், வருடா வருடம் மாணவர்களை நாம் இழந்து வருகிறோம்.

இந்த இடத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. இருந்தாலும், தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையை ஒன்றிய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். ஒருமுறை அந்த தீர்மானத்தை ஆளுநர் திரும்ப அனுப்பிவைத்துவிட்டார். இன்னொரு முறை, தமிழக முதல்வர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக குடியரசுத் தலைவருக்கு அந்த தீர்மானத்தை அனுப்பி வைத்திருக்கார்.

எனவே, இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். தற்கொலை செய்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தயவுசெய்து எந்த தவறான முடிவும் எடுக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மாணவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். எனவே, ஒன்றிய பாஜக அரசு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

அப்போது, நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் என்று ஆளுநர் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆளுநர் வேறு ஓர் உலகத்தில் இருக்கிறார். அவர் தமிழக மக்களின் மனநிலையை சுத்தமாக அவர் புரிந்துகொள்ளவே இல்லை. இந்த நான்கைந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட 20 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். ஆளுநர் இதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழக அரசின் மசோதாவை அவர் வெகு நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். முதல்வரின் அழுத்தம் காரணமாக டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார். எனவே, ஒன்றிய பாஜக அரசு இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை - குரோம்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19) இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மகன் உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். | தொடர்புடைய செய்தி > சென்னை | நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x