Published : 14 Aug 2023 02:53 PM
Last Updated : 14 Aug 2023 02:53 PM
ஓசூர்: அஞ்செட்டி அருகே கோட்டையூரிலிருந்து மட்டியூர் செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து கரடுமுரடாக இருப்பதால், இச்சாலையைப் பயன்படுத்தும் மலைக் கிராம மக்கள் தினசரி துயரங்களைச் சந்திக்கும் நிலையுள்ளது.
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, பெட்டமுகிலாளம், அஞ்செட்டி, உரிகம், கோட்டையூர், கெம்பங்கரை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் சாலை வசதி, கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை இல்லாத நிலையே இருந்து வருகிறது.
இந்நிலையில், அஞ்செட்டி அருகே கோட்டையூர், மலையூர் மலைக் கிராமத்தைச் சுற்றிலும் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிக்கு கோட்டையூர் வந்து அங்கிருந்து அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதிக்குச் செல்ல வேண்டும்.
இதனால், கோட்டையூர்-மலையூர் இடையிலான 4 கிமீ தூரம் சாலை இப்பகுதி மக்களுக்குப் பிரதானமாக உள்ளது. கோட்டையூர் வரை மட்டுமே பேருந்து வசதிகள் உள்ளன. இதனால், மலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கோட்டையூர் வரை இருசக்கர வாகனம் அல்லது சரக்கு வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலையுள்ளது.
குறிப்பாக இப்பகுதியில் மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளதால், விளை பொருட்களைச் சந்தைப்படுத்த வெளியூர்களுக்கு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், கோட்டையூர்-மட்டியூர் சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாகவும், பல இடங்கள் குண்டும் குழியுமாகவும் மாறி போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. இதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாகிப் பாதி வழியில் நிற்பதும், டயர் பஞ்சராவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. எந்த அதிகாரியும் எங்கள் குறைகளைத் தீர்க்க வருவதில்லை. கோட்டையூர் - மட்டியூர் சாலை சேதமடைந்து பல ஆண்டாகியும் சீரமைத்தபாடில்லை. மேலும், கோட்டையூருக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பேருந்துகள் உள்ளதால், அனைவரும் இருசக்கர வாகனங்களை நம்பியே பயணம் செய்கிறோம்.
ஆனால், ஜல்லிகள் பெயர்ந்த கரடுமுரடான சாலையில் வாகனங்களில் செல்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்துக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது மிகவும் நிதானமாக வாகனங்களை இயக்க வேண்டிய நிலையுள்ளது. பல நேரங்களில் இச்சாலையில் செல்லும்போது அதிர்வில் வழியிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுகிறது.
பல நேரங்களில் அவசர மருத்துவ உதவிக்கு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையுள்ளது. நகரப் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ள நிலையில், எங்கள் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது. குறைந்த பட்சம் கரடுமுரடான 4 கிமீ தூரம் தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT