Published : 14 Aug 2023 01:34 PM
Last Updated : 14 Aug 2023 01:34 PM

60 நோயாளிகளுக்கு ஊசி போட ஒரு செவிலியர்: செங்கை மருத்துவமனையில் உயிர் காக்கும் நர்ஸ்களுக்கு பற்றாக்குறை

செங்கல்பட்டு: நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,114 செவிலியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், வெறும் 140 பேர் மட்டுமே உள்ளதால், 974 செவிலியர் பற்றாக்குறை உள்ளது. அதிகப்படியான பணிச்சுமையால் செவிலியர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 1961-ல் அப்போதைய முதல்வர் காமராஜர் தலைமையில், 150 உள்நோயாளிகள், படுக்கை வசதியுடன் செங்கல்பட்டில் அரசு தலைமை மருத்துவமனை தொடங்கப்பட்டது.

பின்னர், 320 ஏக்கர் பரப்பளவில், 1965-ம் ஆண்டு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்கு திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனை தொடங்கி 61 ஆண்டுகள் கடந்த நிலையில், இங்கு தற்போது 34 புறநோயாளி பிரிவுகள், 1,726 உள்நோயாளிகள் படுக்கை வசதிகள் உள்ளன.

பொதுவாக மக்கள்தொகையில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர், ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்ற விகிதத்தில் மருத்துவமனைகளில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவு என்றால் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் வீதம், ஒரு நாளுக்கு 3 செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். பொது வார்டுகளில் 6 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 3 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,114 செவிலியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், வெறும் 140 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால், 974 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதிகப்படியான பணிச்சுமையால் செவிலியர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, இத்துறை சார்ந்தவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத்தின் செங்கல்பட்டு கிளை தலைவர் எம்.ஏழுமலை: சராசரியாக 60 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற அளவில் பணியாற்றி வருகிறோம். இதனால் பலமடங்கு அதிக பற்றாக்குறை நிலவுகிறது. இதன் விளைவாக, மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகி, மிகுந்த மன அழுத்தத்தில் பணிபுரிகிறோம். இங்கு பல சிறப்பு பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கட்டிடம், தாய் - சேய் நலப் பிரிவு கட்டிடம் (மொத்தம் 600 படுக்கை வசதிகள்) ஆகியவை புதிதாக திறக்கப்பட்டும் ஒரு செவிலியர்கூட புதிதாக பணி யமர்த்தப்படவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளாக மாறி, கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை வெகுவாக உயர்ந்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டுமின்றி, மருத்துவர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், ஆண்-பெண் செவிலியர் உதவியாளர், மருத்துவமனை ஊழியர் எண்ணிக்கையிலும் பற்றாக்குறை உள்ளது. இதனால், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உரிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏழுமலை

பாஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளரான டாக்டர் எம்.பிரவின் குமார்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தொடங்கப்படும்போது இருந்த ஊழியர் எண்ணிக்கையில்தான் தற்போது வரை செயல்படுகிறது. தினமும் இங்கு சுமார் 4 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக வருகின்றனர்.

சுமார் 1,500 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அனைத்து உயர் சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் எம்பிபிஎஸ் மட்டும் இருந்தது. காலப்போக்கில் முதுநிலை, சிறப்பு முதுநிலை வரை தற்போது செயல்படுகிறது. நரம்பியல், எலும்பியல், பச்சிளம் குழந்தை பிரிவு, மகப்பேறு மருத்துவம், காது மூக்கு தொண்டை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் உள்ளன.

எம்.பிரவின் குமார்

வந்தவாசி, கடப்பாக்கம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மேல் சிகிச்சைக்காக பலரும் இங்கு வருகின்றனர். எனவே, குறைந்தபட்சம் 800-க்கும் மேற்பட்ட செவிலியர்களாவது இருந்தால்தான், ஓரளவுக்கு தடையின்றி மருத்துவம் செய்ய ஏதுவாக இருக்கும். அதிமுக ஆட்சியில் நியமித்ததை தவிர, தற்போது திமுக ஆட்சியில் புதிதாக செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை.

மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவுக்கு செவிலியர்கள் கூடுதலாக தேவைப்படும் நேரங்களில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து தற்காலிக செவிலியர்களை நியமித்துக் கொள்ளுமாறு கூறுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து பற்றாக்குறை நிலையிலேயே பணியாற்றுவது செவிலியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும். எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடனடியாக போதிய செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x