Published : 14 Aug 2023 11:59 AM
Last Updated : 14 Aug 2023 11:59 AM

”ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்” - ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: சென்னையில் மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் தற்கொலையால் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை இரு முறை எழுதியும், மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான சென்னை குரோம்பேட்டை மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதும், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டதும் மிகுந்த வேதனையும், துயரமும் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்த புகைப்படக்காரர் செல்வசேகரின் புதல்வர் ஜெகதீஸ்வரன், கடந்த 2022-ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற போதிலும், போதுமான மதிப்பெண்களை பெறாததால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. அதனால், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருக்கிறார். அவருடன் பயின்ற மாணவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்த நிலையில், தம்மால் மருத்துவப் படிப்பில் சேர முடியாதோ என்ற கவலையில் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரை வளர்த்து வந்த தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டார். நீட் ஒரு குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது.

நீட் தேர்வு ஓர் உயிர்க்கொல்லி நோய் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த 2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு கொண்டு வரப்படுவதற்கான நோக்கமாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட இரு அம்சங்கள், மருத்துவக் கல்வியின் தரத்தை நீட் அதிகரிக்கும்; மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை நீட் தேர்வு தடுக்கும் என்பன தான். ஆனால், இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் நீட் தோற்று விட்ட நிலையில், அதை மத்திய அரசு ரத்து செய்திருக்க வேண்டும்.

கொண்டு வரப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றாத நீட் தேர்வு, ஊரக, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து குறைந்தது நான்கு ஆண்டுகளாவது பயிற்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்காக குறைந்தது ரூ.20 லட்சம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாதவர்கள் மருத்துவம் பயில்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. பொருளாதார வசதி இல்லாமல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள், அதில் வெற்றி பெற முடியாத போது தற்கொலை செய்து கொள்கின்றனர். அதனால் தான் உயிர்க்கொல்லி தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்பதால் தான், அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக 2021&ஆம் ஆண்டு செப்டம்பர் 13&ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுனரே திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 19 மாதங்கள் நிறைவடைந்து விட்டன; அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 16 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்க வில்லை. நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்பதும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளிப்பதுமாக சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்படாததால், அதில் மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகமும் நீடிக்கிறது.

மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருவது தான் கல்வியின் கடமை. ஆனால், அந்த கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இனி ஓர் உயிரைக் கூட நாம் இழக்கக்கூடாது. அதைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக மனித உயிர் என்பது விலை மதிப்பற்றது; எதற்காகவும் இழக்கப்படக்கூடாதது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்; தற்கொலைகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x