Published : 14 Aug 2023 06:15 AM
Last Updated : 14 Aug 2023 06:15 AM
சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் தனது சொந்த கருத்தைத் திணிக்காமல், நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
பாமக இளைஞர் மற்றும் மாணவரணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் அன்புமணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்வது கண்டிக்கத்தக்கது. தண்ணீரை வைத்துக்கொண்டு, கொடுக்க மறுப்பதால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.
இப்போதே நம்மால் சமாளிக்க முடியவில்லை என்றால், மேகேதாட்டு அணையைக் கட்டினால் சுத்தமாக தண்ணீர் கிடைக்காது. எனவே, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் என்பதில், அனைத்துக் கட்சியும் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் செய்ய வேண்டாம். நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது. என்எல்சி நிர்வாகம் 3-வது சுரங்கம் அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுரங்கத்துக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் உத்திரவாதம் கொடுத்தார். ஆனால், அந்த அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் நான் கேட்டபோது, இதுவரை தமிழக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.
என்எல்சி விவகாரத்தில் பாமக உணர்வுப்பூர்வமாக போராடி வருகிறது. என்எல்சி நிர்வாகம் தமிழகத்துக்கு 800 மெகாவாட் மின்சாரம் தருகிறது. அதிக அளவில் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும்தான் கொடுக்கிறது. எங்கள் மண்ணை அழித்து, அவர்களுக்கு ஏன் மின்சாரம் தர வேண்டும்? மண்ணக்காகப் போராடிய எங்கள் கட்சிக்காரர்கள் சிறையில் இருக்கிறர்கள். கஞ்சா விற்பவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்.
நீட் மசோதா ரத்துக்கு நான் அனுமதி அளிக்க மாட்டேன் என்று தமிழக ஆளுநர் கூறுகிறார். அவர் சொந்த கருத்தை திணிக்கக் கூடாது. ஆளுநர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். மக்கள் கருத்தை மதிக்க வேண்டும். எனவே, ஆளுநர் கூறியதை ஏற்க முடியாது.
தமிழகத்தில் பாஜக தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் நீட் தேவையில்லை என்று வலியுறுத்துகின்றன. பணம் இருந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும். 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு இல்லையென்றால், அரசுப் பள்ளி மாணவர்கள், விரல் விட்டு எண்ணும் வகையில்தான் இருந்திருப்பார்கள். தமிழகத்தில் நீட் பயிற்சி மையங்களை மூட வேண்டும் என்பதை ஆளுநர் ஒப்புக் கொள்வாரா? நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது. எனவே, இதுபோன்று பேசுவதை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT