Published : 14 Aug 2023 06:12 AM
Last Updated : 14 Aug 2023 06:12 AM
சென்னை: நாங்குநேரி சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகளைப் போதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓ.பன்னீர்செல்வம்: நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. மாணவர்களின் எதிர்காலத்துக்கு அச்சாரமாக விளங்கக்கூடிய பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கிறது.
பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப வேண்டும். பள்ளிகளில் தேசப்பற்று, மனித நேயம், மனிதாபிமானம், நீதி போதனைகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் போதித்து, மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நிகழாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்: நாங்குநேரி சம்பவம் சாதிப் பிரச்சினை அடிப்படையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர்களிடையே சாதி ரீதியான வெறுப்புணர்வை யாரும் தூண்டக்கூடாது. வருங்காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அரசும், பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய, நன்மைபயக்க கூடிய வழிமுறைகளைப் போதிக்க வேண்டும்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்: மாணவர் வெட்டப்பட்ட விவகாரத்தில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, சாதிய வன்மத்தை விதைக்க சதி நடந்து வருகிறது. பதற்றமான இச்சூழலில், நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிஷன் நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.
எனவே ஒரு நபர் கமிஷன் தேவையற்றது. மேலும், இந்து முன்னணி, இந்து வழக்கறிஞர்கள் முன்னணியின் குழு சார்பில் சம்பவம் குறித்து நேரில் ஆய்வுசெய்து விரிவான அறிக்கை தயார் செய்து, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் அந்த அறிக்கை அனுப்பிவைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT