Published : 14 Aug 2023 06:09 AM
Last Updated : 14 Aug 2023 06:09 AM

மீனவர் மாநாட்டை நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

தூத்துக்குடி: மீனவர் மாநாட்டை நடத்த திமுகவுக்கு தகுதியில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: தூத்துக்குடியில் முத்துக்குளித்தல் தொழில் செய்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெறும் மாவட்டம் தூத்துக்குடி. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் 79 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. மாநில அரசு ஊக்கப்படுத்தினால் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் முதலிடத்துக்கு வந்துவிடுவர். தூத்துக்குடி துறைமுகம் தற்போது 38 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

துறைமுக விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ரூ.7,164 கோடி ஒதுக்கியுள்ளது. நாகப்பட்டினம்- தூத்துக்குடி சாலை விரிவாக்கத்துக்கு ரூ.7,000 கோடி, மதுரை- நாகர்கோவில்- தூத்துக்குடி ரயில் பாதை மேம்பாட்டுக்கு ரூ.1,890 கோடி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.620 கோடியில் பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.441 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் திட்டங்களை தடுக்கும் வேலைகளை கனிமொழி எம்.பி. செய்கிறார். அவரை தூத்துக்குடி தொகுதிக்கு உள்ளேயே அடைத்து விட்டார்கள். இதனால் ஏற்பட்ட கோபத்தை மத்திய அரசு மீது அவர் காட்டுகிறார். திமுக சார்பில் ராமேசுவரத்தில் இம்மாதம் மீனவர்கள் மாநாடு நடத்துகின்றனர்.

மீனவர்களுக்கு எந்த திட்டத்தையும் செய்யாத இவர்கள் எப்படி மீனவர் மாநாட்டை நடத்த முடியும்? கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் 81 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனை பிரதமர் மோடி முழுமையாக தடுத்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படவில்லை. மீன்பிடிதடைக்கால நிவாரணம் ரூ.8,000, புதிய மீன்வளக் கல்லூரி என பல திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், எதையும் கொண்டுவரவில்லை என்றார்.

தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பன் என்பவரின் கடைக்கு சென்ற அண்ணாமலை, அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டார். சென்னை சென்றதும் 100 புத்தகங்களை அனுப்பி வைப்பதாக உறுதியளித்த அவர், கடை விரிவாக்கத்துக்கு நிதியுதவி தந்தார். தொடர்ந்து நேற்று மாலை வைகுண்டம் பேரவை தொகுதியில் நடைபயணம் சென்றார். இன்று திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x