Published : 17 Nov 2017 08:08 PM
Last Updated : 17 Nov 2017 08:08 PM

பாலம் வந்ததால் எங்க நிம்மதி போச்சு: புலம்பித் தவிக்கும் பரிசல் கிராமம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி ஊராட்சியில் அமைந்திருக்கிறது வன பத்திரகாளியம்மன் கோயில். சாதாரண தினங்களில் பல ஆயிரம் பேர், விசேஷ தினங்களில் லட்சம் பேர் என திரளும் அளவு பிரபலமாக உள்ள இந்த கோயிலின் முக்கிய இன்னொரு அம்சம். இந்த கோயிலை ஒட்டி ஓடும் பவானியில் உருளும் பரிசல்கள். ஆற்றின் அக்கரையில் உள்ள நெல்லித்துறை ஊராட்சிக்கு ஒரு காலத்தில் பரிசல்களே போக்குவரத்து வாகனமாக பயன்பட்டன. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் நகருக்கு வரும் பெரியவர்கள் வரை அதிலேயே பயணிப்பார்கள். சந்தைக்கு வந்து போகும் கோழி, ஆடு, மாட்டுக் கன்றுகள் எல்லாம் கூட பரிசலிலேயே வரும். போகும். இதற்காக மாதாமாதம் ஊர்க்காரர்கள் ஒரு தொகை பரிசல்காரர்களுக்கு சம்பளமாகவும் கொடுத்து வந்ததுண்டு. தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிக்கு வாக்குப்பெட்டிகள், தேர்தல் அதிகாரிகள் கூட பரிசலிலேயே செல்வார்கள். எனவே இந்த நெல்லித்துறை கிராமத்தை பரிசல் கிராமம் என்றே அழைத்தனர்.

அதே சமயம் கோயிலுக்கு வரும் பக்தர்களும் பவானி ஆற்றில் சில கிலோமீட்டர் தூரம் வரை பரிசலில் பயணித்து சுற்றிலும் உள்ள காடுகளையும், அதன் சூழல்களையும் தரிசித்து மகிழ்ச்சி அடைந்தனர். அதற்காக பரிசல்காரர்கள் ரூ.1 ரூ.2 என கட்டணமும் வசூலித்து வந்தார்கள். பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வருபவர்கள் இந்த பரிசலில் ஒரு முறை பயணம் போகாமல் இங்கிருந்து அகலவும் மாட்டார்கள்.

நீண்ட கால நெல்லித்துறை ஊராட்சி மக்கள் போராட்டத்திற்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்தது. அதில் வாகனங்கள் செல்ல, ஊரில் பரிசலுக்கான தேவையே இல்லாமல் போனது. அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களையும், ஆற்றில் மீன்பிடிப்பதையும் நம்பியே பரிசல்காரர்கள் பிழைப்பு நடந்து வந்தனர். அதே நேரத்தில் காரமடை வனத்துறை பில்லூர் அணைக்கு மேலுள்ள பரளிக்காடு பவானியில் (பில்லூர் அணையின் கீழ்பகுதி பவானி கரையில் உள்ளது பத்திரகாளியம்மன் கோயில்) சூழல் சுற்றுலா ஒன்றை ஆரம்பித்தது.

அங்குள்ள பழங்குடியின மக்களே சமைத்துத் தரும் பல்வேறு உணவுப் பதார்த்தங்களை சாப்பிடும் சுற்றுலாப் பயணிகள், அங்கே உள்ள 20க்கும் மேற்பட்ட பரிசல்களில் அமர்ந்து பில்லூர் பவானியின் மேல்பகுதியில் சுற்றி வரலாம். அங்கே வனவிலங்குகள், அடர்காடுகள், பறவைகள் எல்லாம் தரிசிக்கலாம். ஒரு நாளைக்கு சுமார் 200 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த சூழல் சுற்றுலாவில் வரும் வருவாய் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் பத்திரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

அதனால் இங்குள்ள பாரம்பர்ய பரிசல்காரர்களின் பிழைப்பு சிக்கலாக, அவர்களுக்கு உதவ முன்வந்தது நெல்லித்துறை ஊராட்சி நிர்வாகம். பரளிக்காட்டில் உள்ளது போலவே ஃபைபர் மெட்டலால் செய்யப்பட்ட ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 6 பரிசல்கள் வங்கிக் கடன் உதவியுடன் பெற்று தரப்பட்டிருக்கிறது. அதில் பாதி தொகை மானியம். 6 பரிசல்காரர்களும் இங்கே இதை இயக்குவதற்கு பஞ்சாயத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தி ஏலம் எடுத்துள்ளார்கள். அந்த வகையில் பரிசலில் ஏறுபவர்கள் பெரியவருக்கு ரூ.20-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு பரிசலுக்கு ஆறுபேர் மட்டுமே அனுமதி. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல கூட்டம் வருவதாக தெரிவிக்கிறார்கள் பரிசல் ஓட்டுபவர்கள்.

இது குறித்து இங்குள்ள பரிசோலாட்டிகள் கூறுகையில், ''இப்பவும் மூங்கில் பரிசல்கள் எங்க கிராமத்தில் இருக்கு. அதையும் சில பேர் எடுக்கிறாங்க. ஆனா மக்களை சுற்றிக் காண்பிக்க பயன்படுவது இந்த பரிசல்கள்தான். இப்பவெல்லாம் பரளிக்காட்டுக்கு இணையாக இங்கேயும் கூட்டம் வருகிறது. அங்கே ஒரு வாரத்துக்கு முன்னாடியே புக்கிங் தீர்ந்து போறதால, அங்கே டிக்கெட் கிடைக்காத நிலையில் இங்கே நிறைய பேர் வந்துடறாங்க. அதேபோல் பரளிக்காட்டில் பரிசல் ஓட்ட ஆளில்லை என்றால் எங்களை வரச் சொல்லிடுவாங்க. நாங்க போவோம்.

பாலம் கட்டறதுக்கு முன்னாடியெல்லாம் நெல்லித்துறையில் பரிசலோட்டத் தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க. இக்கரையிலும், அக்கரையிலும் நாலஞ்சு பரிசல்கள் எப்பவுமே இருக்கும். யார், எந்த நேரத்தில் வந்தாலும் அதை எடுத்துக்கிட்டு ஊருக்குள் வர்றதும், போறதும் நடக்கும். இப்ப எல்லாம் பாதி பேர் பரிசல் ஓட்டறதையே மறந்துட்டாங்க. இப்ப இருக்கிற ஆளுகளும் மெல்ல, மெல்ல வெவ்வேற வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டதால மெல்ல, மெல்ல பரிசல் ஓட்டவே ஆள் சிக்காம போகும்!'' என்றனர் அவர்கள்.

பரிசல்காரர்கள் இப்படி சொன்னாலும் பாலம் வந்ததால் எங்கள் ஊரின் நிம்மதியே போச்சு என புலம்புகிறார்கள் நெல்லித்துறை மக்கள். ''வனபத்திரகாளியம்மன் கோயிலில் கிடாவெட்டு விருந்துதான் பிரபலம். அதுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரியிலிருந்தெல்லாம ஜனங்க வர்றாங்க. அவங்களுக்காகவே இங்க வாடகைக்கு விருந்தளிக்கும் விடுதிகள், மண்டபங்கள் உருவாகிடுச்சு. பாலம் கட்டியதால் நெல்லித்துறை தாண்டி விளாமரத்தூர் (3 கிமீ தூரம்) வரை கூட விடுதிகள் வந்துடுச்சு. இங்கெல்லாம் குடிமகன்கள் வந்து ஆட்டம்போடுவதே வாடிக்கையாகி விட்டது. அதிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து பவானி ஆற்றில் போடும் ஆட்டம் தாங்கவே முடியறதில்லை. அவங்க ஓட்ற வாகனங்கள் நிறைய விபத்துகளை ஏற்படுத்தி, அடிதடி கலாட்டாவும் தொடர்ந்து நடந்துட்டிருக்கு. போலீஸும் பெரிசா நடவடிக்கை எடுக்கறதில்லை'' என்றனர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x