Published : 14 Nov 2017 02:56 PM
Last Updated : 14 Nov 2017 02:56 PM

பாழடைந்து இடிந்து விழும் நிலையில் சந்தைக் கட்டிடங்கள்: கவலையில் காரமடை விவசாயிகள், பொதுமக்கள்

கிராமத்துச் சந்தைகள் என்றாலே சபிக்கப்பட்டதுதானா? என கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் காரமடை மக்கள். அந்த அளவுக்கு அடிப்படைவசதியின்மையிலும், சுகாதாரக்கேட்டிலும் தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வியபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் எல்லோருமே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நீலகிரி மலைகளின் அடிவாரத்தில் உள்ளதால் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் மலைக்காய்கறிகளின் வியபார கேந்திரமாக விளங்குகிறது. அதேபோல் அங்கிருந்து கோவை செல்லும் பாதையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காரமடையும் அதே முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பேரூராட்சியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருப்பதாலும், நீலகிரியின் மஞ்சூர் சாலை இங்கே இணைவதாலும், பல்வேறு மலைகிராமங்களுக்கும் இதுதான் வியாபார ஸ்தலமாக விளங்குகிறது. அதற்கேற்ப இங்கே 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி மற்றும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமை காலை வேளைகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளும், வியாபாரிகளும் கூடி விளைபொருட்களை வர்த்தகம் செய்கின்றனர்.

அதில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பர்லியாறு, துடியலூர், மேட்டுப்பாளையம், காரமடை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், துடியலூர், அன்னூர் என நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து விவசாயிகள் வருகின்றனர். வெள்ளியன்று மாலை கூடும் சந்தையில் 1000க்கும் மேற்பட்ட சந்தைக்கடைகள் கடைவிரிக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இதற்காக பேரூராட்சி ஏலதாரர் மூலம் வியாபாரிகளிடம் ரூ.20, ரூ.30 என சுங்கம் வசூலிக்கப்படுகிறது. தவிர தலைச்சுமை, மொபட், ஆட்டோ, வேன்களில் வரும் பொருள்களுக்கு ஏற்ப மூட்டைக்கு ரூ.10, ரூ.20 என வசூல் செய்கிறார்கள். பொதுக்கழிப்பிடம் கிடையாது. கட்டணக்கழிப்பிடம்தான். அதற்கும் தலைக்கு ரூ.5 வசூல் நடக்கிறது. விவசாயிகளுக்கு என போடப்பட்ட இரண்டு பெரிய கட்டிடங்கள் இருக்கிறது. அங்குள்ள தூண்கள் எல்லாம் அரைகுறையாய் இடிந்து, சரியும் நிலையில், மேற்கூரையெல்லாம் பிடுங்கிப்போட்ட நிலையில் காட்சி தருகிறது. அதில் வரிசையாக அமர்ந்து வியாபாரம் செய்து வந்த விவசாயிகள் யாவரும் அதற்கு வெளியே பாதையில் அமர்ந்து பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

அதனால் பாதை குறுகலாகி நெருக்கடியிலேயே மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இப்படி செல்லும்போது அவர்கள் அருகாமையில் உள்ள பாழடைந்த கூரைதொங்கிப் போன கட்டிடம் எப்ப வேண்டுமானாலும் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது. அதுமட்டுமல்லாது, இதையொட்டியே பெரிய சாக்கடை ஓடுகிறது. அதில் பாதி விவசாயப் பொருட்களின் குப்பை நிறைந்து, சாக்கடையில் முங்கி கொசுக்களை பெருக்கி வருகிறது. அதற்குள்ளேயே காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள் வியாபாரிகள்.

ஆயிரக்கணக்கில் கடைகள் இருந்தும் யாருக்கும் மின்சார விளக்கு கிடையாது. இருக்கிற இரண்டு தெருவிளக்குகளும் பெரும்பான்மை நாட்கள் எரிவதில்லை. ''சந்தை நல்லாத்தான் நடக்குது. அதுல சுங்க வசூல் மட்டும் நல்லா வசூல் பண்ணிக்கிறாங்க. ஆனா இடிந்த கட்டிடத்தை சுத்தமாக இடித்து தள்ளிவிட்டு புதிய கட்டிடம் தர மாட்டேங்கறாங்க. பல முறை பேரூராட்சியியல் முறையிட்டுள்ளோம். சந்தைகள் மேம்பாட்டு திட்டம் என்று ஏதோ ஒன்று வருதாம். அதுல முடிச்சுத்தர்றோம்ன்றாங்க. ஆனால செய்யத்தான் மாட்டேங்கிறாங்க!'' என்றனர் நம்மிடம் பேசிய சந்தைக்கு வரும் வியாபாரிகள் சிலர்.

இங்கே 35 வருடங்களுக்கு மேலாக தன் காட்டில் விளைந்ததை கொண்டு வந்து விற்கும் விவசாயி மூர்த்தி கூறுகையில், ''2இந்த கட்டிடங்கள் எல்லாம் நான் முதல்ல பார்த்து காலத்திலிருந்து நல்லாத்தான் இருந்தது. இடையில்தான் இடிஞ்சுடுச்சு. மழை வெயில்காலங்களில் அந்த மேற்கூரையுள்ள கடைகளில்தான் எல்லாம் வியாபாரம் செஞ்சுட்டு இருந்தோம். இப்ப பத்து வருஷமாத்தான் அதுக்கு பக்கத்துல அஞ்சி, அஞ்சி வியாபாரம் செய்யறாங்க. ஏற்கெனவே சோமனூர் பஸ் ஸ்டேண்ட் கட்டிடம் சரியா பரமாரிக்காமத்தான் சுவர் இடிஞ்சு அதுல சிக்கி ஆறு பேர் செத்தாங்க. அதுக்கப்புறம் இந்த கட்டிடத்தின் முன்பு பயந்து பயந்துதான் நாங்களே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கு. இங்கே குடிக்கத் தண்ணீர் வசதி கூட கிடையாது. ஒரு பாட்டில் 40 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. இதை ஏலம் எடுத்தவர், உள்ளூர் கவன்சிலர்கள் எல்லோரிடமும் எடுத்து சொல்லியாச்சு. யாருமே கேட்கறதா இல்லே. ஏதாவது விபரீதம் நடந்தால்தான் அரசாங்கம் விழிக்கும் போல இருக்கு!'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x