Published : 25 Nov 2017 10:08 AM
Last Updated : 25 Nov 2017 10:08 AM
உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க, ஓய்வூதியர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate) ஆதார் எண்ணுடன் சேர்த்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்துக்குள் இந்தச் சான்றிதழை அளித்தால்தான் ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் பெற முடியும். இதனிடையே, இந்த ஆண்டு இச்சான்றிதழை சமர்ப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என தகவல் வெளியானதால் ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் கூட்டம் அலைமோது கிறது.
இந்நிலையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலீல் சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சென்னை மண்டலத்தில் மட்டும் 1.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், ராயப்பேட்டை அலுவலகத்தில் 75 ஆயிரம் பேரும், அம்பத்தூர் அலுவலகத்தில் 45 ஆயிரம் பேரும், தாம்பரம் அலுவலகத்தில் 35 ஆயிரம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். ஓய்வூதியம் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கும் வகையில், ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், மத்திய அரசு இந்த சான்றிதழுடன் ஆதார் எண்ணையும் சேர்த்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயமாக்கியுள்ளது. இதற்காக, ஓய்வூதியதாரர்கள் நேரில் வந்து தங்களுடைய கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதற்காக எங்கள் அலுவலகத்தில் 15 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு நாள்தோறும் 2 ஆயிரம் பேர் இச்சான்றிதழை சமர்ப்பித்து வருகின்றனர். இதற்கு இம்மாதம் 30-ம் தேதி கடைசி தேதி கிடையாது. டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினாலும் ஓய்வூதியதாரர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. ஜனவரியில்கூட இணைக்கலாம். ஆனால், முன்கூட்டியே இணைக்கத் தவறியதற்காக ஜனவரி மாதம் ஓய்வூதியம் கிடைக்காது. அதே நேரத்தில் பிப்ரவரி மாத ஓய்வூதியத்துடன் ஜனவரி மாத ஓய்வூதியமும் சேர்த்து வழங்கப்படும். மேலும், ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகளிலோ, அல்லது வீட்டருகே உள்ள இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களிலோ சமர்ப்பிக்கலாம். பொது சேவை மையங்களில் இச்சான்றிதழை சமர்ப்பிக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் வெளியூரில் இருந்தாலும் அங்கு அருகில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலோ அல்லது தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கியின் கிளைகளிலோ சென்று சமர்ப்பிக்கலாம். இவ்வாறு செல்லும்போது, தங்களுடைய ஓய்வூதிய சான்று, வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் எண்ணை எடுத்துச்செல்ல வேண்டும். வங்கிகளும் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வரும் ஓய் வூதியதாரர்களை அலைக்கழிக்காமல் அவர்களிடம் இருந்து சான்றிதழைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT