Published : 13 Aug 2023 09:32 PM
Last Updated : 13 Aug 2023 09:32 PM
கும்பகோணம்: கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்னை சில்க்ஸ் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துணிகளை வாங்குவதற்காக அங்கு குவிந்திருந்தனர். இந்நிலையில் மாலை 7 மணி அளவில் அந்த நிறுவனத்தின் முகப்பு பகுதியிலிருந்து புகை எழும்பியது. இதனையறிந்த சாலையில் நின்றவர்கள், நிறுவன ஊழியரிடம் தெரிவித்ததையொட்டி, கடை ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி சாலையில் ஓடினர்.
மேலும், எதிர்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழகம், தனியார் மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்தவர்களும் அலறி அடித்து கொண்டு வெளியேறினார். இதில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் அந்த இடத்திற்கு வந்தனர்.
பின்னர், கும்பகோணம், திருவிடைமருதூர் தீயணைப்பு துறை சேர்ந்த 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து, தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 50 அடி உயரத்திற்கு மேல். தீ பரவியதால் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக போலீஸார் முதற்கட்ட விசாரணையில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் மற்றும் மின் சாதனங்களால் தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது என தெரிவித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT