Published : 13 Aug 2023 07:07 PM
Last Updated : 13 Aug 2023 07:07 PM
மதுரை: “இந்தியை திணிக்கவே 3 சட்டங்களை பெயர் மாற்றி பிரதமரும், அமித்ஷாவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்” என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக மதுரை திருநகரில் செய்தியாளர்களிடம் அவர் இன்று (ஞாயிறு) கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏமாற்றம் அளித்தது. மணிப்பூர் பிரச்சினை பற்றி மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது தான் இண்டியா கூட்டணியின் கோரிக்கை. ஆனால் அவர் பிரதமரைப் போல் இன்றி பாஜக கட்சித் தலைவராக பேசினார்.
ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் பதிவிடாமல் கூச்சலிடுவதுதான் பாஜகவின் ஜனநாயகம். எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்டு செய்திருப்பது 75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் நடக்காதது. நாடாளுமன்றம் ‘மன்கி பாத்’ மன்றமாக மாறியது. இந்தியை திணிக்கும் வகையில் 3 சட்டங்களையும் இந்தியில் பெயர் மாற்றி அறிமுகம் செய்து, பிரதமரும் அமித்ஷாவும் ஒரு தலை பட்சமாக செயல்படுவது தொடர்கிறது.
நீ்ட் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் பேசியிருப்பது அகங்காரத்தின் உச்சம். பாஜக தலைவரை போன்று பேசும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது.இபிஎஸ் கூறியிருப்பதைப் போல, நாடாளுமன்றம் நடந்தால் தான் பேச முடியும். நாங்குநேரியில் நடந்ததை கூட அருகில் இருப்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார் எடப்பாடி. நாடாளுமன்றம் நடக்கவில்லை என, அவருக்கு யாராவது சொல்ல வேண்டும்.
டிகே.சிவக்குமார் அமைச்சரான பிறகு தண்ணீர் இருந்தால் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்க மாட்டோம் என, கூறியிருப்பது தவறு. இதை கண்டிக்கி றோம். அங்கு யார் ஆட்சியாக இருந்தாலும், சேர்ந்து முடிவெடுக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் ஆட்சி பார்த்து பேசும் நிலையில் இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி காவிரி விவகாரத்தில் 100 சதவீதம் தமிழக அரசின் நிலையில் நிற்போம். முதல்வர் இதற்காக என்ன சொல்கிறாரோ காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்வோம்.
மதுரை, விருதுநகரில் பயணம் செய்த அண்ணாமலை மதுரை எய்ம்ஸ், கப்பலூர் டோல்கேட் , மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவை குறித்து எதுவும் பேசவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் என எங்களிடம் சொல்வதைக் காட்டிலும், அவர் பிரதமர் , மத்திய அமைச்சர்கள் என்ன செய்யவேண்டும் என, அவர்களிடம் சொல்லவேண்டும். எங்களது தொகுதிக்கான பிரச்சினைகளை குறித்து பேசாத அண்ணாமலை எங்களைக் கேள்வி கேட்க அருகதை இல்லை. மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆறு ஏக்கர் நீர்நிலை நிலம் மட்டும் மிஞ்சி உள்ளது. சுற்றுச்சுவர் பணி நடக்கிறது. பிற வேலை முடிவதற்குள் நிலங்கள் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT