Published : 13 Aug 2023 03:21 PM
Last Updated : 13 Aug 2023 03:21 PM

“சமாதானம் அடைய விரும்பவில்லை” - ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: “ஊட்டச்சத்து குறைபாட்டில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம்தான் #ஊட்டச்சத்தை_உறுதிசெய்!” எனப் பதிவிட்டுள்ளார். ஒரு காணொளியை வெளியிட்டு அதற்கு இந்த விளக்கத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறை ஒன்றிணைந்து, 6 வயதுக்கு குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 6 வயது வரையுள்ள மிதமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 9.3 லட்சம் குழந்தைகள் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டாா்கள். அதில் 43,200 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை உள்பட வெவ்வேறு மருத்துவ சிகிச்சைகள் மாவட்ட ஆரம்ப சிகிச்சை மையங்களில் அளிக்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பிறவியிலேயே கண்டறியப்பட்ட இருதய நோய், பிறவியிலேயே கண்டறியப்பட்ட மூளை வளா்ச்சி குறைபாடு, பிறவி பாா்வை குறைபாடு, பிறவி காது கேளாமை, பிறவி கால் ஊனம் போன்ற பிறவி குறைபாடுகளை உடைய 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது அவா்கள் நலமாக உள்ளனா் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில் "ஏற்றமிகு ஏழு திட்டங்கள்" கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் மூலம் பயன்பெற்ற வருண் (வயது 4), நுசாய்பா (வயது 2) மற்றும் சாய்திரன் (வயது 2.5 ) ஆகிய குழந்தைகளின் பெற்றோர்களிடம் அக்குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x