Published : 13 Aug 2023 02:21 PM
Last Updated : 13 Aug 2023 02:21 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி- மதுரை இடையே அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க ரயில்வே துறை முடிவு செய்திருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் கடந்த 1999- 2000-ம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாப்பட்டி, ஆவியூர், பாறைப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரை வரை 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல் கட்டமாக தூத்துக்குடி அருகே மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கி.மீ. தொலைவுக்கு ரூ.260 கோடி செலவில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த 2022 ஜனவரி 12-ம் தேதி ரயில் இன்ஜினை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி- மதுரை புதிய ரயில் பாதை திட்டத்தை போதிய நிதி இல்லாததால் நிறுத்தி வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். இது தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்ட பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி எம்.பி.கனிமொழி நேற்று முன்தினம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்து, ‘தூத்துக்குடி- அருப்புக்கோட்டை - மதுரை ரயில் திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’ என, வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரம்மநாயகம் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: இத்திட்டத்தின் மூலம் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை போன்ற பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சியடையும். விருதுநகர், ராமநாதபுரம், சிவங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்து எளிதாக நடைபெறும்.
143.5 கி.மீ., தொலைவு கொண்ட இத்திட்டத்தில் தூத்துக்குடி- மீளவிட்டான் வரை ஏற்கெனவே ரயில் பாதை உள்ளது. மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை புதிய பாதை அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. அதுபோல திருப்பரங்குன்றம் முதல் மதுரை வரையிலும் ஏற்கெனவே பாதை உள்ளது. அடுத்தகட்டமாக ரூ. 70 கோடியில் பாலங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.114 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை எந்த வகையிலும் கைவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT