Published : 13 Aug 2023 02:14 PM
Last Updated : 13 Aug 2023 02:14 PM
கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டையில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வந்த 10 நாட்களில் முடங்கியது. இதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி சிங்காரப்பேட்டை. பெங்களூரு - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிங்காரப்பேட்டையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள், சிங்காரப்பேட்டை, குருகப்பட்டி, கென்னடி நகர், மேட்டுத் தெரு மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் மக்களின் தேவைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின், திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூ.7.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம், கட்டிடத்துடன் கடந்த 2018-19-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் மூலம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.5-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பயன்பெற வேண்டிய நிலையில், சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட 10 நாட்களில் பழுதால் முடங்கி உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சுத்திகரிக்கப்பட்ட ஒரு கேன் (25 லிட்டர்) தண்ணீர் ரூ.30-க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. இதேபோல் தான் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தாகத்தை தீர்க்க ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.20-க்கு வாங்கி குடிக்கின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள், பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மத்திய அரசு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், திறக்கப்பட்டு 10 நாட்களில் பழுதானது.
இதனை, ஒப்பந்தம் எடுத்தவர்கள் சீரமைத்தனர். ஆனால் அடுத்த இரு நாட்களில் மீண்டும் பழுதாகிவிட்டது. தற்போது வரை சீரமைக்காமல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பூட்டியே உள்ளது. இதனால் ஆர்.ஓ., குடிநீரை கூடுதல் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே, ரூ.7.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்றனர். இது குறித்து அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்ட போது, ஓரிரு நாட்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பழுதை சரி செய்ய ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT