Published : 13 Aug 2023 02:08 PM
Last Updated : 13 Aug 2023 02:08 PM
சென்னை: நாட்டின் மிக பழமையான மாநகராட்சியாக விளங்குகிறது சென்னை. இது மாநகராட்சியாகி 335 ஆண்டுகள் ஆகின்றன. தொடக்கத்தில் இங்கு குளங்கள், ஆழம் குறைவான கிணறுகளில் இருந்து மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
அப்படி குடிநீர் தேவைக்காக மின்ட் அருகே 7 கிணறுகள் தோண்டப்பட்ட பகுதிதான் தற்போது ‘ஏழு கிணறு’ என அழைக்கப்படுகிறது. பிரேசர் என்ற கட்டுமானப் பொறியாளர் சென்னைக்கு வடமேற்கே 160 கி.மீ. தொலைவில் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து மாநகருக்கு விநியோகம் செய்யும் திட்டத்தை முன்மொழிந்தார்.
அதாவது, தாமரைப் பாக்கத்தில் கொசஸ் தலை ஆற்றின் குறுக்கே ஓர் அணை கட்டி, அங்கிருந்து சோழவரம் ஏரிக்கு நீரை திருப்பி விட்டு, அங்கிருந்து கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு தண்ணீரை அனுப்பலாம் என்பதுதான் அந்த திட்டம். கடந்த 1870-ம் ஆண்டு இத்திட்டம் செயல் பாட்டுக்கு வந்தது.
பின்னர், மாநகரில் நீர் மூலமாக பரவும் நோயான காலராவை கட்டுப்படுத்த ஆங்கிலேய சிறப்பு பொறியாளர் ஜே.டபிள்யூ.மேட்லி 1914-ம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தார். இது தமிழகத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் புழல் ஏரியில் இருந்து எடுத்து வரப்பட்ட குடிநீர் முதலில் 14 அடுக்குகளாக அமைக்கப்பட்ட மித மணல் வடிகட்டி என்னும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டது.
பின்னர் தரைக்கு கீழ் உள்ள தொட்டியில் நீர் சேகரிக்கப்பட்டு, நீராவியில் இயங்கும் பம்ப்செட்கள் மூலம் வார்ப்பு இரும்பு குழாய்களின் வழியே விநியோகம் செய்யும் வகையில் கட்டமைப்பு மாற்றப்பட்டது. அன்று அவர் அமைத்த குழாய்கள் வழியாகதான் இன்றும் மாநகரில் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இந்த கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு இன்று 109 வயதாகிறது.
பின்னர், 1935-ம் ஆண்டு நீராவி இயந்திரங்களுக்கு விடை கொடுத்து, மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1978-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து பிரிந்து, சென்னை குடிநீர் வாரியம் உதயமானது. இன்று பல்வேறு மாற்றங்களை கண்டு தினமும் 1,050 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மாநகரின் 80 லட்சம் மக்களுக்கு விநியோகித்து வருகிறது.
வெளிநாடுகள்போல சென்னை மாநகரிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெற வேண்டும் என்பது சென்னை குடிநீர் வாரியத்தின் நீண்ட நாள் கனவு. இதற்கிடையே பல சவால்களையும் சமாளிக்க வேண்டி உள்ளது. ஆயுளை இழந்த குடிநீர் விநியோக குழாய்கள், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது,
அனைத்து வீடுகளிலும் சமமான அழுத்தத்தில் குடிநீர் வராதது, வீடுகளில் முறையாக பராமரிக்கப்படாத குழாய்களால் குடிநீர் கசிந்து வீணாவது போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் வாரியம் திணறி வருகிறது. இந்நிலையில், நாட்டில் முதல்முறையாக ஒடிசா மாநிலம் புரி நகரில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை மாநில குடிநீர் விநியோக நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
அதேபோல, சென்னை குடிநீர் வாரியம் சோதனை அடிப்படையில் ரூ.69.64 கோடி மதிப்பீட்டில் சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் 149-வது வார்டு ( ராமகிருஷ்ணா நகர் ), 152-வது வார்டு ( மெஜஸ்டிக் குடியிருப்பு ) ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.
கரோனா பரவல் கால தடைகள் உள்ளிட்டவற்றை கடந்து இத்திட்டம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. தமிழகத்திலேயே 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெறும் முதல் வார்டுகள் என்ற சிறப்பையும் பெற உள்ளன.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்துக்காக 100 மி.மீ. முதல் 450 மி.மீ. விட்டமுள்ள பகிர்மான குழாய்கள் 81 கி.மீ. நீளத்துக்கு மேல் பதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 3 கி.மீ. தூரத்துக்கு பதிக்க வேண்டியுள்ளது. 1.86 கி.மீ. நீளத்துக்கு உந்து குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மெஜஸ்டிக் குடியிருப்பில் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. ராமகிருஷ்ணா நகரில் 29 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் 8,212 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் 70 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள். செப்டம்பரில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும். முதலில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய உள்ளோம். இந்த சேவையை தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக, பிறகு மீட்டர் பொருத்தி, பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டண விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 24 மணி நேர குடிநீர் விநியோகம் செயல்பாட்டுக்கு வந்தால், அது வாரியத்துக்கு மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும். அடையாறு, கோடம்பாக்கம் ஆகிய 2 மண்டலங்கள் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய, ஒடிசா மாநில குடிநீர் விநியோக நிறுவனம் மூலமாக ஆய்வு தொடங்கி உள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT