Published : 13 Aug 2023 01:00 PM
Last Updated : 13 Aug 2023 01:00 PM
மதுரை ‘‘1989ம் ஆண்டு நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் சொல்கிறேன், பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது, ’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை வளையங்குளத்தில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு மாநாடு, வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, இன்று காலை மதுரை வந்த அவர், வலையங்குளம் சென்று மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார். மாநாட்டு அரங்கம், நுழைவு வாயில், உணவு வழங்கப்படும் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாநாட்டின் போது தொண்டர்கள் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் அவர்களுக்கான சாப்பாடு, அடிப்படை வசதிகள் ஏற்டுத்த வேண்டும், என நிர்வாகிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், நத்தம் ஆர்.விஸ்வநாதன், எஸ்பி.வேலுமணி, விஜய பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
அதன்பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
கேள்வி: சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நேரிட்ட அவமானம், அது அவராகவே ஏற்படுத்திக் கொண்ட நாடகம் என முதல்வர் கூறியிருக்கிறாரே?
ரொம்ப நாளாக சிந்தித்து சிந்தித்து இப்போதுதான் சொல்லியிருக்கிறார். 1989ம் ஆண்டு நடந்த சம்பவம். இப்போதுதான் முதல்வருக்கு ஞாபகம் வந்து வெளிப்படுத்தியிருக்கிறார். மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டனர். எம்.பி கனிமொழி இதில் சில கருத்துக்களைச் சொன்னார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 89 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வை குறித்து பேசினார். அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன். அந்த அடிப்படையில் அதை நான் இங்கு தெரிவிக்கிறேன்.
சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் எதிர்க்கட்சியின் தலைவர், பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது. அப்போதைய முதல்வர் கண்ணெதிரே ஒரு பெண் மீது நடைபெற்ற தாக்குதல் நடைபெற்றதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள். ஆனால், மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியபோது மீண்டும் முதல்வராக தான் இங்கு வருவேன் என்று சபதம் மிக்க அதை நிறைவேற்றினார். ஆனால், முதலமைச்சர் பொய்யான செய்தியை சொல்கிறார். சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி பேசியதற்கு ஜெயலலிதா பதிலளிக்க முற்பட்ட போது தான் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது.
இந்த சம்பவத்தின் போது கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்தனர். அப்போது தற்போது இருக்கிற மூத்த அமைச்சர் ஒருவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். ஒரு சில அமைச்சர்கள் அவரை கடுமையாக தாக்கினார். சட்டப்பேரவையில் கருப்பு தினமாக அந்த நாளை பார்க்கிறேன். சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம் பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றது இல்லை. ஆனால் முதல்வர் இதை கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
கேள்வி: ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று கவர்னர் கூறிவிட்டாரே?
இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும். பொய்யை கூறித்தான் ஆட்சிக்கு வந்துள்ளனர். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறினார். ஆனால், சொன்னபடி நடந்து கொண்டாரா? இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வை அமுல்படுத்தி விட்டார்கள். தமிழகத்தில் மட்டும் எப்படி ‘நீட்’ தேர்வை ரத்து செய்வார்கள்.
அதனால், திமுக திட்டமிட்டு மக்களை ஏமாற்றி, கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். உச்சநீதிமன்றமே ‘நீட்’ விவகாரத்தில் தீர்ப்பு கூறிவிட்டது. உச்ச நீதிமன்றம் எதிர்ப்புக்கு எதிராக என்ன செய்திட முடியும். நாங்கள் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கு தயாராகதான் இருக்கிறோம். ஆனால், ஆளுநர் ஒத்துழைக்கமாட்டேன் என்பதாக மக்களை மீண்டும் ஏமாற்றுகிறார்.
மக்களவையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார்களா?. ஆனால், நாங்கள் பாஜக கூட்டணியில் இடம்பெற்று இருந்தாலும், காவிரி நதி நீர் பிரச்சினைக்காகவும், டெல்டா மக்கள் உரிமைக்காக 22 நாட்களாக மக்கவையில் ஒத்திவைக்கும் அளவிற்கு குரல் எழுப்பினோம். மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு தைரியம் வேண்டும். குடும்பதான் அவர்கள் கண்ணுக்கு தெரியும். குடும்ப ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
கேள்வி: மதுரை அதிமுக மாநாட்டுக்கு எதிராக சமூக ரீதியாக சில எதிர்ப்புகள் வருகிறதே?
சமூக ரீதியாக எதிர்ப்பே கிடையாது. எப்போதும் நான் சாதாரண தொண்டன். அனுபவ ரீதியாக சமூக நீதியை காக்க போராடி வருகிறோம். சமூக நீதியை காப்பாற்றும் ஒரே கட்சி அதிமுக. மதத்துக்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக.
கேள்வி: மத்தியில் பாஜகவுடன் அதிமுக ஒருங்கிணைந்து செல்லும் நிலையில் மாநில பாஜக அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறதே?
இதற்கு நான் என்ன பதில் சொல்வது. நீங்களே பதில் கூறிவிட்டீர்கள்.
கேள்வி: மதுரை மாநாட்டுக்கு மோடி, அமித்ஷா வருகின்றனரா?
இது கூட்டணி கட்சி மாநாடு அல்லது. அதிமுகவின் கட்சி மாநாடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT