Published : 13 Aug 2023 10:27 AM
Last Updated : 13 Aug 2023 10:27 AM

நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக ஒன்றியச் செயலாளர் காரணம்: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

கோவில்பட்டி: மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப் பயணத்தை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்று தொடங்கினார்.

வழி நெடுகிலும் ஏராளமான பாஜகவினர், பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசியதாவது: அதிகமான குளங்கள் இருந்ததால் இந்த ஊரை விளாத்திகுளம் என அழைக்கின்றனர். ஆனால், இங்குள்ள எம்.எல்.ஏ. எந்த குளத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஒரு புறம் மக்கள் வைப்பாற்றில் தண்ணீர் வேண்டும் என்கின்றனர். மறுபுறம் எம்.எல்.ஏ. மணல் வேண்டும் என்கிறார். அவர் எப்போது எந்த கட்சியில் இருப்பார் என்று தெரியாது. காற்றாலைக்காரர்களிடம் இவர் கமிஷன் கேட்ட ஆடியோ தமிழ்நாடு முழுவதும் பரவியது. இவர் இந்த ஊருக்கு எந்த வேலையும் செய்யாமல், மணல் திருடுவதை மட்டுமே தனது முதன்மை பணியாக வைத்துள்ளார்.

இதனால் இந்த பூமி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. திமுக தனது 2021-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையை சரி செய்து, இந்த 3 மாவட்டங்களுக்கும் முழுமையான தண்ணீரை கொடுப்போம் என பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. குலசேகரன் பட்டினத்துக்கு பாரத பிரதமர் புதிய ராக்கெட் ஏவுதளம் வழங்கி உள்ளார்.

இதனை ஒரு சுற்றுலா தலமாக மாற்றுவோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி அளவிலான தொழிற்சாலைகள் வந்துவிடும். மத்திய அரசு சாமானிய மக்களுக்காக ஆட்சி நடத்துகிறது. மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

இப்படிப்பட்ட பிரதமர் மீண்டும் பிரதமராக வரக்கூடாது என தமிழக முதல்வர் கூறுகிறார். பிரதமர் மோடியின் மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனரா? துபாய்க்கு போய் ரூ.6,100 கோடி கொண்டு வருவேன் என்று சொல்லி, ஒன்றரை ஆண்டுகளாகியும் 6 ரூபாய் கூட கொண்டு வராதவரா? மணல் மற்றும் தண்ணீரை திருடி விற்பனை செய்கிறாரா?

தமிழக முதல்வர் ஆட்சி நடத்துவது தனது குடும்பத்துக்கு, மகனுக்கு, மருமகனுக்காகத்தான். எதை செய்தாலும் இவர்கள் நல்லாயிருப்பார்களா என்றுதான் அவருக்கு யோசனை. நாங்குநேரி சாதிக்கலவரத்துக்கு திமுக ஒன்றியச் செயலாளர்தான் காரணம். 3-வது முறையாக 400 எம்.பி.க்களுடன் மீண்டும் மோடி பிரதமராக வருவார்.

தமிழகம், புதுச்சேரியில் இருந்து 40 எம்.பி.க்களை நாம் உருவாக்கி கொடுக்க வேண்டும். இந்திய பிரதமராக மோடி இருந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரில் பயணம் மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x