Published : 13 Aug 2023 04:50 AM
Last Updated : 13 Aug 2023 04:50 AM

சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்காக 6 கிராம ஊராட்சிகளுக்கு விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளை ஆறு கிராம ஊராட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக சட்டப்பேரவையில் 2021-22-ம் ஆண்டுக்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், “முன்மாதிரி கிராம விருது” தோற்றுவிக்கப்பட்டு, மாவட்டத்துக்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில், 37 கிராம ஊராட்சிகளுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கி கவுரவிக்கப்படும். இவ்விருதுக்கான கேடயமும், தலா ரூ.7.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன்மாதிரி கிராம விருது வழங்கி அதற்கான கேடயமும், தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளூர் கிராம ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நட்டாத்தி கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2022-23-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாயக்கன்பாளையம் கிராம ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம்சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்மருவத்தூர் கிராமஊராட்சி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரியனேந்தல் கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாநில அளவிலான முன்மாதிரி கிராம விருதுகளும், பரிசுத் தொகையாக தலா ரூ.15 லட்சம் மற்றும் கேடயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று வழங்கி வாழ்த்தினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் ப.செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x