Published : 13 Aug 2023 04:57 AM
Last Updated : 13 Aug 2023 04:57 AM
சென்னை: தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல்பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர வெண்ணெய், நெய், தயிர் உட்பட 225 வகையான பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, விற்பனை செய்யப்படுகின்றன.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பச்சை நிற ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. அதன்படி, ஒரு லிட்டர் பால் ரூ.47-ல் இருந்து ரூ.44-ஆக குறைக்கப்பட்டது. இதற்கேற்ப 5 லிட்டர் பால் பாக்கெட்டின் விலையும் ரூ.225-ல் இருந்து ரூ.210-ஆக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பால் உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், உணவகம், ஓட்டல்கள், பெரிய நிறுவனங்களின் சிற்றுண்டி சாலையில் பயன்படுத்தப்படும் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் அனுப்பிய சுற்றறிக்கையில், "பச்சை நிற பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், அதற்கேற்ப 5 லிட்டர் பாலின் விலையையும் மாற்றியமைக்கும் வகையில், இனி ரூ.210-ல் இருந்து ரூ.220-க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு ஆக. 12-ம் தேதி முதல் அமலுக்கு வரும்" என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த 5 லிட்டர் பச்சை நிற பாக்கெட் பாலின் விலை உயர்வு நேற்று அமல்படுத்தப்பட்டது.
15 லட்சம் லிட்டர் பால்: தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலமாக, சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தால், வழங்கப்படும் பச்சை நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வணிக நிறுவனத்துக்காக, விற்பனை செய்யப்படும் 5 லிட்டர் பால் ரூ.210க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே, வணிக நிறுவனத்துக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்போது ரூ.210-ல் இருந்து ரூ.220 ஆக மாற்றப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT