Published : 13 Aug 2023 05:05 AM
Last Updated : 13 Aug 2023 05:05 AM

அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்து உரியமேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாதுகாக்கக் கூடிய குழந்தைகளின் நலனை உறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மையங்கள் மிகுந்த செயல்திறனுடன் செயல்படுவதையும், மையங்களின் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான வளர்ப்புச் சூழலை வழங்குவதையும் உறுதி செய்வது என்பது அரசினுடைய முக்கிய கடமையாகும்.

இந்த மையங்கள் செயல்படும் கட்டிடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டிடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஏதேனும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகள் அல்லது கட்டமைப்பு சிக்கல்கள் இருந்தால் அவற்றை ஆவணப்படுத்தி அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் அத்தகைய வாய்ப்புகள் கிட்டாத குழந்தைகளுக்கு அவர்களின் நிலை அறிந்து சேவை செய்வது என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். அங்கன்வாடி மையங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது என்பது மிக முக்கியமானதாகும்.

ஆய்வு மேற்கொள்ளும்போது அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். குழந்தைகளை துல்லியமாக எடைபோடுவதற்கான சரியான நுட்பத்தை பணியாளர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதையும் மதிப்பிட வேண்டும். எடையிடும் இயந்திரம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்த்து, குழந்தையின் வளர்ச்சி பற்றிய குறிப்புகள் கண்காணிப்பு அட்டையில் பதிவிடப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

சத்து மாவு, முட்டைகள்...: சத்து மாவு இருப்பு தேவைக்கேற்றவாறு உள்ளதா, குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் அக்மார்க் தரத்தில் உள்ளனவா, சரியாக வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்திட வேண்டும். அங்கன்வாடி மையங்களில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்து மாவு மற்றும் அதுகுறித்த விளக்க கையேடு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் உணவு பற்றிய விவரங்களை சேகரித்து, குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

தாய்மார்களுடன் சிறிது நேரம் உரையாடி, மையத்தைப் பற்றிய அவர்களின் கருத்தை தெரிந்து கொள்வதோடு, உள்ளூர் பிரதிநிதிகள் அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை அறிந்து அவ்வப்போது மையங்களின் தேவைகளை அரசுக்கு தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கும் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x