Published : 13 Aug 2023 04:36 AM
Last Updated : 13 Aug 2023 04:36 AM
சென்னை: நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. எனவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் பட்டதாரிகள், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுடன் ‘எண்ணித் துணிக’ எனும் தலைப்பில் ஆளுநர் ரவி கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
அந்தவகையில், ‘எண்ணித் துணிக’ 3-ம் கட்ட நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், நீட் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த தமிழக மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ரவி பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: நீட் தேர்வில் தமிழக மாணவர்களால் போட்டிபோட முடியாது என்று சிலர் தவறான கருத்துகளை முன்வைக்கின்றனர். தேர்வு பயத்தால் கடந்த காலங்களில் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பொதுத் தேர்வை பயத்துடன் எதிர்நோக்கும் நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழக மாணவர் நீட் தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு, எம்பிபிஎஸ் இடங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஆளுநர் பேசினார்.
பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார். அப்போது, சேலத்தை சேர்ந்த மாணவரின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி என்பவர், "நீட் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவரின் பெற்றோர் அதிகம் செலவளிக்க வேண்டியுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்" என்றார்.
அதற்கு ஆளுநர் ரவி, "நான் நீட் தேர்வு ரத்துக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. நீட் தேர்வு ரத்து மசோதா, குடியரசுத் தலைவரிடம் உள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் எனக்கு இருந்தால், கண்டிப்பாக நான் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன். நீட் தேர்வில் பயிற்சி பெறாமலேயே மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி மையத்துக்குச் சென்றால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்பது கற்பனையே. வகுப்பறையில் ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்காத போதுதான், மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் செல்கின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக, தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. நீட் தேர்வுக்கு முன் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் நன்கொடை பெறப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியாத நிலை இருந்தது.
ஆனால், 2019–20-ல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் தற்போது 600 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருகின்றனர்.
நீட் தேர்வுக்கு முன்பு, மருத்துவப் படிப்புகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வணிகம் நடந்தது. ஆனால், மருத்துவப் படிப்பில் நிலவிய முறைகேடுகளை நீட் தேர்வு தடுத்துள்ளது.
நீட் தேர்வு காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் ரூ.150 கோடி வருமானத்தை இழந்தவர்கள்தான் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஆளுநர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT