Published : 13 Aug 2023 07:41 AM
Last Updated : 13 Aug 2023 07:41 AM

நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கட்சி தலைவர்கள் கண்டனம்

நாங்குநேரியில் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன்

சென்னை: நாங்குநேரியில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பள்ளிகளில் சாதிவெறிக்கு இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னதுரையின் வீடுபுகுந்த சக மாணவர்கள், அவரைக் கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவரைக் காப்பாற்ற வந்த அவரது சகோதரியும் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியைக் கண்டுபிடித்து, தொடக்கத்திலேயே அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை: சாதியப் பிரச்சினைகள் காரணமாக பட்டியல் சமூக மாணவர் சின்னதுரையும், அவரது சகோதரியும் சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பள்ளி மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவது எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது.

மாணவர் சின்னதுரையின் கல்விப்பொறுப்பை, தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை வரவேற்கிறேன். அதேநேரம் இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பள்ளியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக மாணவர் வெட்டப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. சின்னத்துரை மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் தொடக்கத்திலே தடுக்கப்பட்டிருந்தால், அவருக்கும், அவரது சகோதரிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பள்ளிகள்தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் நாற்றங்கால்கள். அங்கு சாதிவெறிக்கு இடமளிக்கக் கூடாது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மாணவன் சின்னத்துரை வெட்டப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு சக மாணவர்களிடம் அன்பு செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். அதைவிடுத்து சாதி, மத உணர்வுகளால் உந்தப்பட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மாணவர் சின்னதுரையின் நற்பண்புகளை ஆசிரியர் பாராட்டி பேசியதை, சக மாணவர்கள் சிலரால் சகித்துக்கொள்ள முடியாத அளவு சாதிவெறி நிலவி இருக்கிறது. இவ்வாறு சாதிவெறியை தூண்டும் செயலில் ஈடுபடுவோர் மீது இரக்கம் காட்டாது. இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: சாதிவெறி பிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இந்த சம்பவத்துக்கு முதன்மை காரணமாகும். அரசு இவற்றை கண்காணித்து மாணவச் சமூகத்தை பாதுகாத்திட வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சாதிய மோதலால்பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார்: எல்லா துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் திகழும் தமிழகத்தில் இதுபோன்ற சாதிய வன்மத்துடன் நடக்கும் சம்பவங்கள் நம்மை மேலும் பின்னோக்கியே இழுக்கும். இந்தியாவிலேயே முன்னேறிய சமூகமாக அடையாளப்படும் தமிழ் சமூகம் இன்னும் சாதிய பாகுபாட்டில் கட்டுண்டு கிடப்பதையே காட்டுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் கு.செல்வப்பெருந்தகை, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநில தலைவர் த.கு.வெங்கடேஷ், உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x