Published : 13 Aug 2023 07:45 AM
Last Updated : 13 Aug 2023 07:45 AM

மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள மகளிருக்கும் உரிமை தொகை

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றுத் திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

1.54 கோடி விண்ணப்பம்: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதுவரை 1.54 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித் துறை செயலாளர் உதயசந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர், மாற்றுத் திறனாளிகள், முதியோரைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்று அரசு கருதுகிறது. எனவே, அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது.

எனவே, மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக, ஆக.18, 19, 20-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அதேபோல் முன்பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர இயலாதவர்களும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x