Published : 13 Aug 2023 07:52 AM
Last Updated : 13 Aug 2023 07:52 AM

உதகை அருகே முத்தநாடு மந்துக்கு வந்த ராகுலுக்கு தோடரின மக்கள் உற்சாக வரவேற்பு

தோடரின மக்களுடன் அவர்களின் பாரம்பரிய சால்வை அணிந்து நடனமாடி மகிழ்ந்த ராகுல் காந்தி. படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகை அருகே முத்தநாடு மந்துக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தோடரின மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை திரும்ப பெற்றதால், மீண்டும் எம்பி ஆக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று சென்றார். முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக நேற்று பகல் 12 மணியளவில் உதகை அருகே எல்லநள்ளி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அங்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து, அவருடன் தேனீர் அருந்தினார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லெட் குறித்தும் கேட்டறிந்தார்.

அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு, கூடலூர் செல்லும் வழியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்துக்கு மதியம் 1 மணியளவில் சென்ற ராகுல் காந்தியை தோடரின மக்கள் தலைவர் மந்தேஷ்குட்டன், மாவட்ட ஊராட்சித் தலைவர் மு.பொன்தோஸ், தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் ப்ரியா நாஷ்மிகர் மற்றும் தோடரின மக்கள் தங்களின் பாரம்பரிய சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர், முத்தநாடு மந்தில் உள்ள பழமைவாய்ந்த மூன் போ, அடையாள் ஓவ் ஆகிய கோயில்களை பார்வையிட்டார். கோயில்களின் பராம்பரியம் குறித்து பூசாரி விளக்கினார். பின்னர், தோடர் இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கியதை கண்டுகளித்தார். பாரம்பரிய நடனமாடிய தோடரின மக்களுடன் சேர்ந்து அவரும் நடனமாடி மகிழ்ந்தார். முன்னதாக அவரது பயணம் குறித்து கேட்டதற்கு, “நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம்” என்றார்.

பின்னர், அங்கிருந்து கார் மூலமாக வயநாடு புறப்பட்டுச் சென்றார். ராகுல் காந்தி வருகையையொட்டி, முத்தநாடு மந்தில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாரத் ஜோடோ யாத்ராவின் ஒரு பகுதியாக, கூடலூரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.

தற்போது 2-வது முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கோவையிலிருந்து கார் மூலமாக கோத்தகிரி வழியாக வந்த ராகுல் காந்திக்கு அரவேணு பகுதியில் பொதுமக்கள் வரவேற்பளித்தனர். மக்களை கண்டதும் வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுடன் கைகுலுக்கி பேசினார். அங்கிருந்து உதகை வந்தவருக்கு சேரிங்கிராஸ் பகுதியில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கணேஷ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x