Last Updated : 08 Nov, 2017 08:54 AM

 

Published : 08 Nov 2017 08:54 AM
Last Updated : 08 Nov 2017 08:54 AM

அதிமுகவின் வங்கிக் கணக்குகளில் 3 மாதங்களாக பண பரிவர்த்தனை நிறுத்தம்

அதிமுகவின் 2 அணிகள் இணைந்த நாளில் இருந்து அக்கட்சியின் வங்கிக் கணக்குகளில் பண பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த அதிமுக இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இணைந்தன. சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து பழனிசாமி - ஓபிஎஸ் அணியும், டிடிவி தினகரன் அணியும் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் கைப்பற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டிய அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும். அதிமுகவின் வங்கிக் கணக்குகளை அவர்கள் தரப்பினர் கையாள தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘அதிமுகவின் 3 வங்கிக் கணக்குகள், ஆவணங்களை நவம்பர் 10-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கை 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிமுக அணிகள் இணைந்தபிறகு அக்கட்சியின் வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலக மேலாளர் பி.மகாலிங்கம் கூறியதாவது:

அதிமுக இரு அணிகளும் இணைந்த நாளில் இருந்து அதிமுகவின் வங்கிக் கணக்கில் (கரூர் வைஸ்யா வங்கி நடப்பு கணக்கு) இருந்து பணம் எடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. அண்ணா அறக்கட்டளையை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நிறுவினார். அதேபோல புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அறக்கட்டளையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறுவினார். இந்த இரண்டு அறக்கட்டளையின் பெயரில் அதிமுக வங்கிக் கணக்கு உள்ளது.

இந்த கணக்குகளில் இருந்து கடந்த 3 மாதங்களாக எந்தப் பணப் பரிவர்த்தனையும் நடக்கவில்லை. அதற்கு முன்பு கட்சி அலுவலக பராமரிப்புப்புக்காக மட்டும் பணம் எடுக்கப்பட்டது. கட்சிப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதியின் பேரிலேயே பணம் எடுக்கப்பட்டது. இரு அணிகளின் பிரச்சினை முடிவுக்கு வரும் வரை அதிமுக வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை நடைபெறக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மகாலிங்கம் கூறினார்.

வங்கிக் கணக்கும் முடக்கப்படலாம்

தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறும்போது, “அதிமுக யாருக்கு என்பதில் இரு அணிகளுக்கு இடையே பிரச்சினை இருப்பதால் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளோம். முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த தங்கக் கவசம் மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தியின்போது அந்த தங்கக் கவசத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என்று அதிமுக இரு அணிகளும் கேட்டன. இதனால் மாவட்ட ஆட்சியரிடம் தங்கக் கவசம் வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில் அதிமுக வங்கிக் கணக்கும் முடக்கப்படலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x