Published : 10 Jul 2014 12:45 PM
Last Updated : 10 Jul 2014 12:45 PM
கோட்டையில் ஊழியர்களுக்காக திறக்கப்படவுள்ள புதிய உடற்பயிற்சிக் கூடத்தில், ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை ரூ.32 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தரைத்தளத்தில் விசாலமான தனித்தனி அறைகளில் ஆண், பெண் ஊழியர்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. பல்வேறு நவீன வசதிகள் மற்றும் கருவிகளுடன் கூடிய இந்த உடற்பயிற்சிக் கூடத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தொடங்கி வைப்பார் எனத் தெரிகிறது.
காந்தி, புரூஸ் லீ, அர்னால்டு
இந்த மையங்களில், ஊழியர் களை உற்சாகப்படுத்துவதற்காக மகாத்மா காந்தி, ஹாலிவுட் நடிகர்கள் புரூஸ் லீ, அர்னால்டு ஆகியோர் கூறிய வாசகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
டிரெட் மில், வயிறு மற்றும் முதுகுக்கான பயிற்சிக் கருவிகள், எலிப்டிகல் டிரெயினர், டேபிள் டென்னிஸ், ஸ்குவாட், லெக் கர்ல் காஃப் போன்ற அனைத்து நவீன கருவிகளும் இடம்பெற்றுள்ளன.
காலையில் 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெண் ஊழியர்கள், சுடிதாரிலும், ஆண் ஊழியர்கள், டீ-ஷர்ட், பேன்ட் அணிந்தும் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலணியும் கட்டாயம்.
இரு மையங்களிலும் முறையே ஆண் மற்றும் பெண் பயிற்றுநர்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நியமித்துள்ளது.
இவை தவிர குளியல் அறை, கழிப்பறை வசதியும் உண்டு. உடற்பயிற்சி செய்வோரின் வசதிக்காக பிரம் மாண்டமான கண்ணாடிகளும் பொருத்தப்பட்டுள் ளன. அடையாள அட்டையைக் காண்பிக்கும் ஊழியர் கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா வேண்டாம்
இந்த மையங்களுக்கு வந்து செல்வோரைக் கண்காணிக்க கேமராக்களும், தொலைக்காட்சிப் பெட்டியும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், உடற்பயிற்சி மையத்தில் கேமரா இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்று சில பெண் ஊழியர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT