Published : 14 Jul 2014 08:36 AM
Last Updated : 14 Jul 2014 08:36 AM
சென்னையில் தீப்பிடித்து இடிந்து போன ஸ்டேட் வங்கிக் கட்டிடம்தான், ஸ்டேட் வங்கியின் தாய் வீடாக இருந்துள்ளது. இந்தக் கட்டிடம் மெட்ராஸ் வங்கி என்ற பழம் பெருமை மிக்க வங்கியாகவும், அரசாங்க வங்கி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஜார்ஜ் டவுண் கிளை, சிறு குறு தொழில்களுக்கான கிளை மற்றும் வீட்டு வசதி சிறப்புக் கிளைக் கட்டிடம், சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நாசமானது. இந்த தீ விபத்தில் எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் பெரும்பாலான சுவர்கள் இடிந்து வெறும் எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றன.
பாரம்பரியமிக்க இந்தக் கட்டிடம், பாரத ஸ்டேட் வங்கியின் தாய் வீடாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் பேங்க் ஆப் மெட்ராஸ், பேங்க் ஆப் மும்பை மற்றும் பேங்க் ஆப் பெங்கால் (கொல்கத்தா) என்று மூன்று துறைமுக மாநகரங்களின் பெயர்களில் வங்கிகள் தனியாக செயல்பட்டன. பிரிட்டிஷ் கவர்னர் வில்லியம் ஜிபோர்ட் உத்தரவின்பேரில் 1806ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மெட்ராஸ் வங்கி என்ற அரசு வங்கி தொடங்கப்பட்டது. பின்னர் மெட்ராஸ் வங்கி, கர்நாடிக் வங்கி, ஏசியாட்டி வங்கி மற்றும் பிரிட்டிஷ் பேங்க் ஆப் மெட்ராஸ் ஆகியவற்றை இணைத்து, 30 லட்ச ரூபாய் மூலதனத்துடன் மெட்ராஸ் வங்கி 1843ல் தொடங்கப்பட்டது. ஜார்ஜ் கோட்டையில் தற்போது அருங்காட்சியகம் இருக்கும் கட்டிடத்தில் இந்த வங்கி செயல்பட்டது.
இதேபோல், 1809ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் பேங்க் ஆப் பெங்கால் வங்கியை பிரிட்டிஷ் பேங்க் ஆப் இந்தியா என்று அறிவித்து, அரசு நிர்வாக நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, 1840ம் ஆண்டு பேங்க் ஆப் மும்பையும், 1843ல் பேங்க் ஆப் மெட்ராஸும் இணைக்கப்பட்டு, பிரிட்டிஷாரால் இம்பீரியல் வங்கி என்ற பெயரில் இணைக்கப்பட்டன.
பின், ராஜாஜி சாலையில் (அப்போதைய வடக்கு பீச் சாலை), வங்கிக்காக தனியாக இடம் வாங்கி, இம்பீரியல் வங்கி அங்கு மாற்றப்பட்டது. தற்போது தீவிபத்தில் இடிந்து போன கட்டிடம் இருக்கும் இடம், ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டது. கொலோனெல் சாமுவேல் ஜேக்கப் என்பவர் இக்கட்டிடத்திற்கான வடிவமைப்பை தயாரித்தார். ஹென்றி எட்வின் என்பவரால் இது சிறிது மாற்றியமைக்கப்பட்டு, 1897ம் ஆண்டில் இந்தோ சார்சனிக் கட்டிடக் கலையை பயன்படுத்தி, பிரபல கட்டிட நிபுணர் நம்பெருமாள் செட்டியார் மூலமாக மூன்று லட்ச ரூபாய் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது.
பின்னர் 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் கூடி தனி சட்டம் இயற்றி இம்பீரியல் வங்கியை பாரத ஸ்டேட் வங்கி என பெயர் மாற்றம் செய்தது. இதையடுத்து, தமிழகத்தின் முதல் ஸ்டேட் வங்கி கிளை, தலைமை அலுவலகம், சென்னையின் பிரதானக் கிளை ஆகியன, தற்போது விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.
இதுகுறித்து, ஸ்டேட் வங்கியின் மக்கள் தொடர்புக்கான கூடுதல் துணை மேலாளர் கே.தயாநிதி கூறும்போது, “1955ம் ஆண்டு மெட்ராஸ் வங்கி, ஸ்டேட் வங்கியான பின், அதன் பெரிய கிளையாக இந்த கட்டிடம் செயல்பட்டது. பின்னர் தலைமையகம் அருகிலுள்ள கட்டிடத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது. தற்போது இந்தக் கட்டிடத்தில் ராஜாஜி சாலை கிளை, சென்னை பிரதானக் கிளை மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கிளை செயல்பட்டு வருகிறது,’என்றார்.
பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் சங்க தலைவர் சுரேஷ்குமார் கூறும் போது,’தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் பாரம்பரிய மான கட்டிடம். இங்குதான் வங்கியின் ஊழியர்கள் தொடர்பான அனைத்து தொழிற்சங்கங்களும் தொடங்கப்பட்டன. தற்போதும் இங்கு தொழிற்சங்க அலுவலகங் கள் உள்ளன. கட்டிடத்தின் வரலாறு குறித்து தனியாக புத்தகமே வெளியிடப்பட்டுள்ளது,’என்றார்.
சுமார் 17 ஆயிரம் கிளைகள் என விரிந்த ஒரு வங்கியின் முதல் கட்டிடம் தற்போது தீ விபத்தின் மூலம் வெறும் காட்சிப் பொருளாக சிதிலமடைந்து விட்டது. இதேபோன்று, பல கட்டிடங்கள் சென்னையில் பாரம்பரிய சின்னமாக இருந்து, அதன் இறுதிக் கட்டத்தை சந்தித்து வருகின்றன.
சென்னையில் எழிலகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கிய கலாஸ் மகால், அண்ணாசாலையிலுள்ள பாரத் இன்ஷூரன்ஸ் கட்டிடம், பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவிலுள்ள ஒய்.எம்.ஐ.ஏ., கட்டிட வளாகம் போன்றவை இந்த வரிசையில், அபாயகரமான, கேட்பாரற்ற நினைவுச் சின்னங்களாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடங்களையும், மீதமுள்ள பாரம்பரியக் கட்டிடங்களையும் புனரமைத்து, அதன் வரலாற்றைக் காக்க அரசு விரைந்து முன் வர வேண்டுமென்பதே, அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT