Published : 12 Aug 2023 09:41 PM
Last Updated : 12 Aug 2023 09:41 PM
கிருஷ்ணகிரி: மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் மூலம், அரசு போக்குவரத்து கழகம் நல்லதொரு வளர்ச்சி பாதையில் செல்வதாக கிருஷ்ணகிரியில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி புறநகர் கிளை வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் சார்பாக, தருமபுரி மண்டலத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா, கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், எஸ்பி சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பணிக்காலத்தில் உயிரிழந்த 54 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளியில் பயின்று முதல் 3 இடங்களை பிடித்த, அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்க பரிசுகள், ஓட்டுநர்களுக்கு கையேடுகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இவ்விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, கடந்த காலங்களில் சீரழிக்கப்பட்ட போக்குவரத்து துறை, தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் போக்குவரத்து துறையில் பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், நமது மாநிலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லை. இதற்கு காரணம், முதல்வர் செயல்படுத்தி உள்ள மகளிருக்கு கட்டணமில்லா பயணத் திட்டம் தான்.
இந்த திட்டத்திற்காக அரசு வழங்கும் நிதியின் மூலம் போக்குவரத்து துறை நல்லதொரு வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. கரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள் கடந்த இரண்டாண்டு காலத்தில் ரூ.1500 கோடியையும், 3 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை இன்னும் 4 மாதங்களுக்குள் அவர்களுக்கு நேர் செய்யப்படும்.
பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில் ரூ.500 கோடி மதிப்பில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும், 1500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ரூ.14 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்கும் அரசாக செயல்படுகிறது, என்றார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மேலாண்மை இயக்குநர் பொன்முடி, தருமபுரி மண்டல பொது மேலாளர் செல்வம், தொழில்நுட்ப பொதுமேலாளர் ரவிலட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலைநாகராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், முருகன், நரசிம்மன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம், நகராட்சி தலைவர் பரிதாநவாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT