Published : 12 Aug 2023 09:10 PM
Last Updated : 12 Aug 2023 09:10 PM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலை மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரி ஆகியவற்றை இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று (ஆகஸ்ட் 12) திறந்து வைத்து உரையாற்றினார்.
அறக்கட்டளை அமைப்புகள் உள்ளிட்டோர் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.
பிஎஸ்எல்வி மாதிரி ராக்கெட் மற்றும் அப்துல்கலாம் சிலை ஆகியவற்றை திறந்து வைத்து மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், "நிலவில் வளிமண்டலம் இல்லை என அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தெரிவித்த நிலையில் நிலவு தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இந்தியா நிலவில் தினம் தினம் வளிமண்டலம் உருவாகிறது என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தது.
இந்தியாவின் சந்திராயன்-1 செயற்கைக்கோள் மூலம் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவ்வாறான திறமைகள் நம்மிடம் உள்ளன. இதைத் தொடர்ந்து முன்னெடுத்து வளர்ப்பதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் தனித்துவம் மேம்படும். வேலைவாய்ப்புக்காக அமெரிக்க நாட்டை தேடி இந்தியர்கள் செல்லும் நிலையை மாற்றி, இந்தியாவை தேடி அமெரிக்கர்கள் வேலைவாய்ப்புக்காக வரும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
மகாபலிபுரத்தில் இருந்து ஏவப்பட்ட 140க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் சென்ற ராக்கெட்டின் மூலம் உலகம் மீண்டும் ஒருமுறை இந்தியாவை திரும்பிப் பார்த்தது. இவ்வாறு நாம் கலாம்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நிலவு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ அந்த உயரம் அளவுக்கு நமது ஆராய்ச்சிகள் வளர வேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களே விண்வெளி ஆராய்ச்சியில் அதிகம் சாதனை செய்து வருகின்றனர். எனவே நமக்கான வாய்ப்பை ஒவ்வொருவரும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடகம் இந்த நான்கு தரப்பும் அமைந்த கூட்டணி சிறப்பாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும். இன்றைய விழாவில் பார்வையாளர்கள் நிலையில் உள்ள நீங்கள் பின்னாளில் இதுபோன்ற மேடைகளை அலங்கரிப்பவர்களாக உயர வேண்டும். இன்றைய சூழலுக்கு ஏற்ப விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளை மேம்படுத்த விண்வெளி சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள் அவசியமாக உள்ளன. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பயன்படுத்துவோம். இது சார்ந்த எண்ணங்களை மனதில் ஆழமாக விதைத்து அதை நோக்கி முயற்சிப்போம்." இவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (அரூர்) இளங்கோவன், பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா, முன்னாள் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT