Published : 06 Nov 2017 11:53 AM
Last Updated : 06 Nov 2017 11:53 AM
சபரிமலை சீஸன் தொடங்கவுள்ள நிலையில் கன்னியாகுமரியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் வெளிமாநிலக் கும்பல் முகாமிட்டுள்ளது. இதனால் படிப்பறிவின்றி குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் அவலம் நிலவுகிறது.
கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் அதிக சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வரும் சீஸனாக சபரிமலை சீஸன் உள்ளது. நடப்பாண்டு வரும் 17-ம் தேதி சபரிமலை சீஸன் தொடங்குகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே இங்கு வந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, பிச்சை எடுக்கும் கும்பலும் அதிக அளவில் இங்கு முகாமிட்டுள்ளது.
பிச்சை எடுக்கும் கும்பல் முகாம்
கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளை வைத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் ஆந்திரா, கர்நாடகா, பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ரயில்கள் மூலம் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். கடற்கரைச் சாலை, திரிவேணி சங்கமம், காந்தி மண்டபம், பகவதியம்மன் கோயில், படகு இல்லம் செல்லும் வழி, ரயில் நிலையம், சூரிய அஸ்தமன மையம் என திரும்பிய பக்கமெல்லாம் இக்கும்பலை காணமுடிகிறது.
இவர்களில் நூற்றுக்கணக்கானோர் கன்னியாகுமரியில் நாற்கரச்சாலை முடியும் இடத்திலும், ரயில் நிலையம் செல்லும் சாலை ஓரத்திலும் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுத்து அவர்களது வாழ்க்கையை பாழாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருடவும் பழக்குகின்றனர்
இதுகுறித்து கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா ஆர்வலர் முருகன் கூறியதாவது:
கன்னியாகுமரியில் சீஸன் காலத்தில் பச்சிளம் குழந்தைகளை வேகாத வெயில் மற்றும் மழையின் போது கையில் ஏந்தியவாறு, சுற்றுலா பயணிகளிடம் அனுதாபத்தை ஏற்படுத்தி பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது. கள்ளம், கபடமில்லா அந்த பிஞ்சு உள்ளங்களை சுற்றுலா பயணிகளின் உடமைகளை திருடுவதற்கும் பழக்குகின்றனர். கூட்ட நெரிசலின் போது சுற்றுலா பயணிகளின் பணப்பையை பறிப்பது, கார்களில் வைத்து விட்டுச் செல்லும் விலை உயர்ந்த பொருட்களை திருடச் செய்வதும் நடக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் பிச்சை எடுப்பதற்காக இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிச்சை எடுக்கும் கும்பல் தங்களது சுயநலத்துக்காக அரசு திட்டத்தில் இக்குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதை மறந்து விடுகின்றனர். இதனால் படிப்பறிவின்றி குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிறது.
எனவே, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT