Published : 11 Aug 2023 09:51 PM
Last Updated : 11 Aug 2023 09:51 PM

“நாங்குநேரி சம்பவம் நடுக்கம் தருகிறது; பள்ளி மாணவர்களிடம் கூட சாதிய நச்சு” - முதல்வர் ஸ்டாலின் வேதனை

சென்னை: “நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.

அதேநேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சம்பவம் தொடர்பாக பேசியுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்; வேற்றுமை உணர்வு வேண்டாம்” என வீடியோ மூலமாக மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம்: “மாணவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க ஆசைப்படவில்லை” - நாங்குநேரி சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 17 வயது மாணவர், அவரது 14 வயது தங்கையை 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதியப் பின்னணி கொண்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x