Published : 11 Aug 2023 06:17 PM
Last Updated : 11 Aug 2023 06:17 PM
மதுரை: பழநி கோயில் பசு மடத்தில் மாடுகள் பராமரிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனியைச் சேர்ந்த ராமசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் பணம், நகை மட்டுமின்றி பசுக்களையும் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கின்றனர். காணிக்கையாக அளிக்கப்படும் பசுக்கள் கோயிலில் 220 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பசு மடம் பராமரிக்கப்படுகிறது. இங்குள்ள பசுக்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பழநி பசு மடத்தில் 17 மாடுகள் உணவு மற்றும் தீவனம் கிடைக்காமல் இறந்துள்ளது. பசு மடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே பழநி பசு மடத்தில் உள்ள பசுக்களின் உண்மை நிலையை தெரியப்படுத்தவும், அங்கிருக்கும் பசுக்களின் உயிரை காப்பாற்றவும், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து பசு மடத்தில் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''பழநி பசு மடத்தில் மாடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் மாடுகள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த பயனாளிகளின் பட்டியல் கோயில் நிர்வாகத்தால் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மாடுகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த வழக்கு விளம்பர நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ''பழநி பசு மடத்தில் எத்தனை பசுமாடுகள் உள்ளன, எத்தனை மாடுகள் பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அந்த மாடுகளை பெற்ற பயனாளிகள் யார் என்பது உள்ளிட்ட விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT