Published : 11 Aug 2023 07:23 PM
Last Updated : 11 Aug 2023 07:23 PM

‘டிப்பர் லாரி ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம்’ - பொத்தேரி விபத்து விசாரணையில் முதற்கட்ட தகவல்கள்

பொத்தேரி அருகே சாலையை கடக்க காத்திருந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி

செங்கல்பட்டு: பொத்தேரி அருகே நடந்த சாலை விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை போலீஸார் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநர் தூங்கியதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:

"செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக எம்.சாண்ட் எடுத்துக் கொண்டு வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பொத்தேரி பகுதியில் சாலையை கடப்பதற்காக இருந்த வள்ளியம்மை கல்லூரியில் பயோ டெக்னாலஜி படிக்கும் மாணவர் கார்த்திக் (23), எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.காம் படிக்கும் ஆற்காட்டைச் சேர்ந்த மாணவர் ஜஷ்வந்த் (22), பொத்தேரி பகுதியைச் சேர்ந்த பவானி (40), இவர்கள் சாலையை கடப்பதற்காக ஓரமாக நின்றிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சிக்னலை உடைத்துக்கொண்டு சாலையைக் கடக்க காத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், கார்த்திக், ஜஷ்வந்த், பவானி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த பார்த்தசாரதி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த விபத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பார்த்தசாரதிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் தூங்கிவிட்டதால், இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில், சாலையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலத்தில் படிக்கட்டுக்கள் இருப்பதால், அதை பயன்படுத்தாமல், சாலையை கடக்கின்றனர். எனவே, நகரும் படிக்கட்டுக்கள் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் டிப்பர் லாரிகள் கட்டுப்பாடின்றி அதிவேகமாக செல்வதால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாகவும், காவல் துறையினர் இந்த டிப்பர் லாரிகளின் வேகத்தைக் கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x