Published : 11 Aug 2023 04:25 PM
Last Updated : 11 Aug 2023 04:25 PM
சென்னை: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலை முறையாக பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலுக்கு செயல் அறங்காவலர், இரு கவுரவ அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக 1941-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், விதிகளை வகுத்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் அறங்காவலர்களை நியமிக்காமல், அறநிலையத் துறை அதிகாரி, செயல் அறங்காவலராக நியமிக்கப்பட்டு வருகிறது. அத்திவரதர் தரிசன நிகழ்வின் போது பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதால் மத்திய கணக்குத் தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.
கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன. பல மண்டபங்கள் சிதிலமடைந்துள்ளன. கோயில் தெப்பக்குளம் முறையாக பராமரிக்கப்படாமல் குப்பைகளால் நிறைந்துள்ளன. கோயிலில் பல இடங்களில் மதுபான பாட்டில்கள், குட்கா பாக்கெட்கள் கிடப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதே கோயில் தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.
மேலும், கோயிலை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT