Published : 11 Aug 2023 10:42 AM
Last Updated : 11 Aug 2023 10:42 AM

பட்டாசு தொழில் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு அளிக்கும்: சிவகாசியில் அண்ணாமலை உறுதி

சிவகாசி: பட்டாசு தொழில் பிரச்சனைக்கு இந்த ஆண்டில் மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என சிவகாசியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் ' யாத்திரையில் 12-வது நாளான நேற்று இரவு 23 வது சட்டப்பேரவை தொகுதியாக சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார். சிவகாசி காரனேசன் சந்திப்பில் இருந்து பத்திரகாளியம்மன் கோயில் தெரு, முஸ்லிம் தெரு, உழவர் சந்தை, வடக்கு ரத வீதி, முருகன் கோயில், தேரடி, அம்பேத்கர் மணி மண்டபம் வழியாக பேருந்து நிலையம் வரை தொண்டர்களுடன் அண்ணாமலை நடந்து சென்றார். அப்போது அவர் பட்டாசு தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களிடம் புகார் மனுக்களை பெற்று கொண்டார்.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலை பேசியதாவது, "இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் பட்டாசும், 70 சதவீதம் தீப்பெட்டியும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் மிகப்பெரிய அளவிலான பிரிண்டிங் பிரஸ் தொழிலும் சிவகாசி நடைபெற்று வருகிறது. எந்த ஒரு நகரிலும் இது போன்ற தொழில் வளர்ச்சி இல்லை. 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், சீன பட்டாசுகளால் சிவகாசி அழிந்து கொண்டிருக்கிறது என மோடி பேசினார். மோடி பிரதமராக பதவியேற்ற பின் பட்டாசு பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு நவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் சீன பட்டாசுகளுக்கு தடை விதித்து பட்டாசு தொழிலுக்கும், மலிவு விலை சீன லைட்டர்களுக்கு தடை விதித்து தீப்பெட்டி தொழிலுக்கும் பிரதமர் மோடி ஆதரவாக உள்ளார். கடந்த ஆண்டு தடை இல்லாமல் தீபாவளி கொண்டாடினோம். அதேபோல் இந்த ஆண்டும் தடை இல்லாத தீபாவளியாக மட்டுமின்றி, பட்டாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை மத்திய அரசு அளிக்கும். பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளதால் மட்டுமே சிவகாசியில் பட்டாசு தொழில் பிரச்சினை இன்றி வேகமாக வளர்ந்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவகாசி தொழில் வளர்ச்சிக்காக வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் மூலம் மூலமாகவே பட்டாசு தொழிலுக்கு எதிராக வழக்கு கொடுக்கப்பட்டு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீர்வாக பட்டாசை தடை செய்ய வேண்டும் என திமுக அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார். கர்ம வீரர் காமராஜர் மூடி கிடந்த 6 ஆயிரம் பள்ளிகளையும், 12 ஆயிரம் புதிய பள்ளிகளையும் சேர்த்து 9 ஆண்டுகால ஆட்சியில் 19 ஆயிரம் அரசு பள்ளிகளை திறந்தார். அதனால் 1954 கல்வி அறிவு பெற்றவர்கள் 7 சதவீதத்தில் இருந்து 1963ல் 37 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் காமராஜரின் சாதனைகளுக்கு திமுக ஸ்டிக்கர் ஓட்டி உரிமை கொண்டாடுகிறது.

சிவகாசி, தென்காசி நகருக்கு காசி உடன் உள்ள தொடர்பை உலகறிய செய்வதற்கு காசியில் தமிழ் சங்கமம் நடத்தினார் மோடி. தமிழகத்தில் பிறக்காத தமிழனாக செல்லும் இடங்களில் எல்லாம் தமிழின் பெருமையை குறித்து மோடி பேசி வருகிறார். தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன் என கூறிய ஸ்டாலின் கடன் வாங்குவதிலும், மது விற்பனையிலும் முதல் மாநிலமாக மாற்றி விட்டார். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் தொடங்கும் அரசு, மது கடைகளை மூட முன்வரவில்லை. 2024 பாராளுமன்ற தேர்தல் என்பது இளைஞர்களை படி, படி என்று கூறும் மோடிக்கும், குடி, குடி என்று கூறும் ஸ்டாலினுக்கும் இடையிலானது." என அண்ணாமலை கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொது செயலாளர்கள் பேராசிரியர் சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x