Published : 11 Aug 2023 03:58 AM
Last Updated : 11 Aug 2023 03:58 AM
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை, அமைச்சர் பொன்முடி பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளதாகஅவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2002-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா, சொத்துக் குவிப்புவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நேற்று தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர், ‘‘நான் பார்த்ததிலேயே மிக மோசமான வழக்கு இது. அதனால்தான் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன்’’ என்றார்.
பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கை கடந்த ஆண்டு மே மாத விடுமுறையில் அவசர வழக்காக விசாரணை நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்துக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம்அனுப்பியுள்ளார். ஆனால், விழுப்புரம் மாவட்ட நீதித் துறை நிர்வாகத்தை கவனித்து வந்த 2 உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதை ஏற்க மறுத்து, ‘இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க கூடாது’ என உத்தரவிட்டு, வழக்கை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளனர். அதற்கு தலைமை நீதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றமும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
தவிர, ஜூன் 23-ம் தேதி எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 28-ம் தேதி, அதாவது 4 நாள் இடைவெளியில், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து அந்த நீதிபதி 226 பக்க தீர்ப்பை பிறப்பித்துள்ளார். தீர்ப்பு வெளியான 2 நாட்களில் நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் மணிவண்ணன், நந்தகோபால் ஆகிய 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 228 சாட்சிகள், 318 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் கடந்த 2006-ல் தள்ளுபடி செய்துள்ளது. 2015-ல் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு புனையும்போது சரஸ்வதி, நந்தகோபால் இறந்துவிட்டதால் மற்ற 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு வேலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு அதிவேகமாக நடந்துள்ளது. வழக்கின் நீதி பரிபாலனத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அமைச்சருக்கு எதிரான முக்கியமான இந்த வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிபதி விசாரிக்க வேண்டாம் என்று கூறி வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற, உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளதா. குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 407, அரசியல் சாசன பிரிவு சட்டம் 227-ன்படி ஒரு வழக்கை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு மாற்றி நிர்வாக ரீதியாக உத்தரவிடும் அதிகாரம் 2 நீதிபதிகளுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், இவ்வாறு செயல்பட தலைமை நீதிபதிக்கும்கூட அதிகாரம் கிடையாது. இதை முழு அமர்வுதான் தீர்மானிக்க முடியும். அல்லது குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின்படி தனி நீதிபதிதான் முடிவு செய்ய முடியும். எனவே, இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். எனது இந்த உத்தரவை தகவலுக்காக தலைமை நீதிபதிக்கு பதிவுத் துறை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT