Published : 11 Aug 2023 06:30 AM
Last Updated : 11 Aug 2023 06:30 AM

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கு - இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவு

சென்னை: முரசொலி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்குவிசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக அவதூறு பரப்பியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.முருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவராக எல்.முருகன் பதவி வகித்தபோது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்துக்கும் முரசொலி அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கடந்த 1974-ல் இந்த நிலத்தை மாதவன் நாயர் என்பவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகத்துக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி வாங்கியுள்ளார். அதன்பிறகு 2022 பிப்.22-ம் தேதி இந்த நிலம் முரசொலி அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால், 2021 ஜன.27-ல் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்ந்துள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x