Published : 11 Aug 2023 06:44 AM
Last Updated : 11 Aug 2023 06:44 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 தினங்களுக்கு முன்பு ஆதவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காமாட்சி(28). என்பவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் மூர்த்தி, 4 வயது மகன் சக்திவேல், மூர்த்தியின் அண்ணி குள்ளம்மாள், அவருடைய 7 வயது மகள் சவுந்தர்யா ஆகியோர் அரசு மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர்.
இவர்களிடம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார். குழந்தைகளிடமும் அன்பாக பழகியுள்ளார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளை அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் இரவு அனைவரும் உறங்கிவிட்டனர். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி அந்தப் பெண் சக்திவேல், சவுந்தர்யா இரு குழந்தைகளையும் கடத்திச் சென்றுள்ளார். காலையில் பார்க்கும்போது குழந்தைகள் மருத்துவமனையில் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பர் என்று இயல்பாக இருந்துள்ளனர். நேரம் செல்ல செல்ல குழந்தைகள் வராததால் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் சந்தேகத்துக்கு இடமான வகையில் அவ்வப்போது வந்து செல்வது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள 120 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஒரு பெண் இந்த 2 குழந்தைகளை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்தப் பெண் இவர்களுடன் பழகியுள்ளதால் குழந்தைகள் கைகளில் சாக்லெட் உள்ளிட்டவைகளை வைத்துக் கொண்டு அவற்றை சாப்பிட்டபடி இயல்பாகச் செல்கின்றனர். ஆனால் அதில் அந்தப் பெண்ணின் முகம் சரவர தெரியவில்லை. இவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனையில் இருந்த பல்வேறு கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் அப் பெண்ணை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் கேமராக்களை பொருத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT