Published : 19 Nov 2017 08:38 AM
Last Updated : 19 Nov 2017 08:38 AM
ஆஸ்திரேலியாவில் உள்ளதுபோல, வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சிக்னல் மாறும் நடைமுறையை கோயம்பேடு உட்பட 10 இடங்களில் செயல்படுத்த சென்னை போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப விபத்துகளும் அதிக அளவில் நடக்கின்றன. கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 33 லட்சம். மொத்தம் 71,431 வாகன விபத்துகள் நடந்துள்ளன. அதில் 17,218 பேர் உயிரிழந்தனர்.
விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விபத்துகளைக் கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீஸார் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன்படி, தினமும் வாகனத் தணிக்கை நடத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் இல்லாமல் கார் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
விபத்து குறைந்தது
கடந்த 5 மாதங்களில் மட்டும் ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 1 லட்சத்து 74 ஆயிரத்து 921 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, தொடர்ந்து சாலை விதிகளை மீறியதாக 14,325 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 485 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போலீஸாரின் தொடர் நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 236 ஆகக் குறைந்துள்ளது என்று சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையர் பெரியய்யா கூறியதாவது:
தினமும் 10 ஆயிரம் வழக்கு
சென்னையில் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 10 ஆயிரம் வழக்கு கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 16-ம் தேதி மட்டும் 10,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஒரு நிமிடம், 2 நிமிடம் என்று நேரத்தின் அடிப்படையில் சிக்னல் மாறுவதில்லை. மாறாக, வந்து நிற்கும் வாகனங்களின் அளவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கடந்த உடன், தானாக பச்சை சிக்னல் விழுந்துவிடும். அதற்கு ஏற்ப, சாலையில் சென்சார் அமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற சிக்னல்களை சென்னை யில் அமைப்பது சாத்தியமா என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கோயம்பேடு உள்ளிட்ட 10 இடங்களைத் தேர்வு செய்து இதை நடைமுறைப் படுத்த போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக 40 சிக்னல்கள்
சென்னையில் மொத்தம் 382 சிக்னல்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வார்தா புயலின்போது சேதம் அடைந்தன. இதையடுத்து, புதிதாக 56 சிக்னல்கள் அமைக்கப்பட்டன. 57 சிக்னல்களின் பழுது சரி செய்யப்பட்டது. தற்போது புதிதாக 40 சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன என்று போக்குவரத்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT