Published : 21 Nov 2017 06:16 PM
Last Updated : 21 Nov 2017 06:16 PM
எது செய்தாலும் செய்யாவிட்டாலும் அது பரபரப்பைப் பற்ற வைத்துவிடும். அதுதான் ரஜினியின் ஜாதகம் போல! முரசொலி விழாவுக்கு வருவேன் ; ஆனால் பேச மாட்டேன் என்று வந்து அமைதியாய் உட்கார்ந்து சென்றார். அதுவும் சர்ச்சையானது. சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவுக்கு வந்தவர், பேசவும் செய்தார். அந்தப் பேச்சும், திரி கிள்ளிப் போடுவதாக அமைந்தது. இதோ... இப்போது ரஜினியின் மந்திராலய தரிசனமும் அப்படித்தான் பல கோணங்களில் பேசப்படுகிறது.
ராகவேந்திரர் எனும் மகான் மீது முதலில் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் ரஜினிகாந்த். தன் படங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் ராகவேந்திரர் பற்றி ய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தார்; இருக்கிறார். ஒருகட்டத்தில் இடம் வாங்கி திருமண மண்டபம் கட்டிய போது, அதற்கு அந்த மகானின் பெயரையே சூட்டினார். கையில் உள்ள ராகவேந்திரர் காப்பு பார்த்து, அதைத் தேடித்தேடி வாங்கி அணிந்து கொண்டார்கள் ரசிகர்கள்.
நடுவே, திருவண்ணாமலை சென்று, பகவான் ரமண மகரிஷி ஆஸ்ரமத்துக்கு சென்று வந்தார். பகவான் யோகி ராம்சுரத்குமார் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றுக் கொண்டார். திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு மின்விளக்குகள் பொருத்துவதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டார்.
தயானந்த சரஸ்வதி சுவாமிகளை அடிக்கடி தரிசித்தார். அவரின் ஆன்மிகத் தேடல் எல்லையற்று விரிந்துகொண்டே இருந்தது. ஒரு படம் முடிந்ததும் ஓய்வுக்காக வெளிநாடு செல்வோர் மத்தியில், ரஜினி இமயமலைக்குக் கிளம்பினார். அப்படி அடிக்கடி நிகழ்ந்த இமயமலைப் பயணத்தால்... மகா அவதார் பாபாஜியை அறிந்து கொண்டார். எப்படி தன்னுடைய 100-வது படமாக ராகவேந்திரரை கதையாகக் கொண்டு படமெடுத்தாரோ, அதேபோல் பாபாஜியின் மகிமையைப் பறைசாற்றும் விதமாக ‘பாபா’ எடுத்தார். ஆனாலும் ராகவேந்திர பக்தராகவே இன்றளவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இருபது வருடங்களாக, அரசியலுக்கு வருவாரா மாட்டாரா எனும் மில்லியன் டாலர் கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்க, வருகிற டிசம்பர் 12 அன்று தன் பிறந்தநாளில், அரசியலுக்கு வருவதை அறிவிக்கப் போகிறார் தலைவர் என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
‘இல்லை இல்லை... தலைவர் அரசியலுக்கெல்லாம் வரமாட்டார். மிகப்பெரிய இயக்கத்தைத் தொடங்குவார் பாருங்கள். அது அரசியல் மாற்றத்தை நிகழ்த்துகிற இயக்கமாக இருக்கும். தேர்தலையோ ஆட்சி அதிகாரத்தையோ பெறுகிற இயக்கமாக, கட்சியாக இருக்காது’ என்று சில ரசிகர்களும் தெரிவிக்கிறார்கள்.
இந்த சமயத்தில்தான், ரஜினி திடீரெனக் கிளம்பி, ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்துக்குச் சென்றார். ராகவேந்திரர் பிருந்தாவனத்தை வணங்கினார். வழக்கமாக, அங்கு வருவதாக இருந்தால், ராகவேந்திரர் மடத்துக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் ஆனால் இந்த முறை எதுவும் சொல்லவில்லை. தடாலென்று வந்து நிற்கிறார் என்றும் மடத்து ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
பொதுவாக, ராகவேந்திரர் முதலான குருமார்களை தரிசிக்கவும் வணங்கவும் வியாழக்கிழமையைத்தான் தேர்வு செய்வார்கள் எல்லோரும். ரஜினியும் இதற்கு விதிவலக்கல்ல. ஆனால் செவ்வாய்க்கிழமை நாளில், திடீரென மந்திராலயத்துக்குச் சென்று தரிசித்தது ஏன் என்று புரியாமல் குழம்புகிறார்கள் ரசிகர்கள்.
ரஜினியும் ஷங்கரும் இணையும் படமாகட்டும், ரஞ்சித்துடன் இணையும் காலா படமாகட்டும். அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அதற்காகத்தான் இந்த பூஜையும் வழிபாடும் என்கிறார்கள் சிலர். அப்படிப் பார்த்தால், இன்னும் நான்கைந்து மாதங்கள் கழித்து படங்கள் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.
’’ரஜினியிடம் எந்தப் பதட்டமோ குழப்பமோ இல்லை. அவர் தீவிர ராகவேந்திர பக்தர். அப்படியொரு பக்தராகத்தான் இன்றைக்கு இங்கே வந்தார். இதில் எந்தக் கேள்விகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் இடமே இல்லை” என்கிறார்கள் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேசமயம், மடத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆச்சார்யர் ஒருவரின் மகளுக்குத் திருமணம் என்றும் அதற்கு ரஜினி அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் அந்த விழாவில் கலந்துகொண்டால், கூட்டம் கூடிவிடும் என்பதால், அதற்கு முன்பே சென்றுவிடலாம் என்று ரஜினி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அமாவாசை முடிந்து இது வளர்பிறை காலம். இப்படியான காலத்தில் வளர்பிறை சமயத்தில் மந்திராலய மகானைத் தரிசித்துவிடலாம். பிறகு பிறந்தநாள் பெளர்ணமிக்குப் பிறகான தேய்பிறைக் காலத்தில் வருகிறது. எனவே அதற்குள் சுவாமி தரிசனம் செய்துவிடலாம் என்பதாக ரஜினி நினைத்திருக்கலாம் என யூகம் கிளப்புகிறவர்களும் உண்டு.
‘’கடந்த 93ம் வருடம், ரஜினி மந்திராலயத்துக்கு வந்திருக்கிறார். பிறகு 2002ம் ஆண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தார். இப்போது, கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மந்த்ராலயம் சென்று மகானை வணங்கியிருக்கிறார். இதில் இருந்தே ஏதோவொரு திட்டத்துடன் ரஜினி இருப்பது தெரிகிறதுதானே!’’ என்கிறார்கள் மடத்தில் பணியாற்றும் ஊழியர்கள்.
என்னதான் திட்டம் ரஜினிக்குள்? 12-ம் தேதி வரை பொறுத்திருப்போமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT