Last Updated : 30 Nov, 2017 10:20 AM

 

Published : 30 Nov 2017 10:20 AM
Last Updated : 30 Nov 2017 10:20 AM

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 54 ஆயிரம் டன் மலேசிய மணல் விற்பனைக்கு வருகிறது: வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதியாக வாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு மாதமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 54 ஆயிரம் டன் மலேசிய மணல், ஓரிரு நாளில் விற்பனைக்கு வரவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் மணல் இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசே மணல் விற்பனையில் ஈடுபடும் என அண்மையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தேவைக்கு ஏற்ற அளவு மணல் கிடைக்காததால் தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் முடங்கின.

இதற்குத் தீர்வு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த மாதம் 21-ம் தேதி, 54,433 டன் மணலை இறக்குமதி செய்தது.

வெளிச்சந்தை விலையை விட 3 மடங்கு குறைவான விலைக்கு இறக்குமதி மணல் கிடைக்கும் என்றும், கட்டுமானப் பணிக்கு உகந்ததாக இருக்கும் என கட்டுமானத் துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

அரசு திடீர் தடை

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது. தமிழகத்தில் அரசு தான் மணல் விற்பனையை செய்யும். மேலும், மணலை சேமித்து வைக்கவும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும், வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். இத்தகைய அனுமதி எதுவும் பெறாததால் மலேசியா மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

மணலை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கக் கோரி, மணலை இறக்குமதி செய்த ராமையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மலேசிய மணலை விற்பனை செய்யவும், வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் அனுமதித்து, உயர் நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும், மணலை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என, துறைமுக அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு தினங்களில் மலேசிய மணல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மணலில் பெரும்பகுதியை கேரளாவுக்கு கொண்டு செல்லவே இறக்குமதியாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தடுத்து, முழுவதையும் தமிழகத்திலேயே விற்பனை செய்ய வேண்டும் என கட்டுமானத் துறையினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இறக்குமதிக்கு வாய்ப்பு

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் கூறியதாவது: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறப்பானது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆற்று வளங்கள் பாதுகாக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கு அதிக வாய்ப்பு ஏற்படும். மலேசியா, கம்போடியா, இந்தோனேஷியா போன்ற குளிர் பிரதேச நாடுகளிலும், இயற்கை சீற்றங்கள் அதிகம் நிலவும் நாடுகளிலும் கட்டிடங்கள் மரங்களைக் கொண்டே வடிவமைக்கின்றனர். அவர்களுக்கு மணல் அதிகம் தேவைப்படுவதில்லை. இந்த நாடுகளில் இருந்து நாம் மணலை இறக்குமதி செய்யலாம்.

வெளிநாடுகளில் இருந்து மணலை அரசே இறக்குமதி செய்ய வேண்டும். கடைசி நுகர்வோர் வரை அரசே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் சாதாரண மக்களும் பயனடைவர். அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x