Published : 11 Aug 2023 12:25 AM
Last Updated : 11 Aug 2023 12:25 AM
சேலம்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது: தமிழகத்தில், கட்டுமான பொருள்கள் விலை உயர்வால், பல இடங்களில் கட்டிடங்களின் கட்டுமானப் பணி பாதியில் நிற்கிறது. புதிய கட்டிடங்கள் வராமல் உள்ளது. கட்டுமான தொழிலில் உள்ளவர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்த முதியோர்களுக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு ரூ.1,000 முதியோர் உதவிதொகை வழங்க அறிவிப்பு வெளியிட்டு, அதில் 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பலருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அரசுக்கு எதிரானவர்களா? நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை, கட்டுமான தொழிலாளர்களுக்கான முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில், விலைவாசி 50 சதவீதம் உயர்ந்துவிட்டது. ஆனால், விலைவாசி உயர்வு குறித்து, திமுக அரசு கவலைப்படவில்லை. அதிமுக ஆட்சியின்போது, புளி விலை உயர்ந்தது. இதனைக் கட்டுப்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கி, புளி கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்தோம். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் முழுமையாக வழங்கினோம். திமுக ஆட்சியில் நிலைமை தலைகீழாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் மாதம் ரூ.6 ஆயிரம் இருந்தால் குடும்பம் நடத்தி விடலாம். இப்போது ரூ.9 ஆயிரம் இருந்தால் தான் குடும்பம் நடத்தும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. ஆட்சிக்கு வந்து, 2 ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படவில்லை.
வரும் செப்டம்பரில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றனர். ஆனால், இதுவரை கணக்கெடுப்பு முடிவடையவில்லை. உரிமைத் தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து, குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றனர். ஆனால், அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர்.
ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்- திட்டம், ஜெயலலிதா பெயரில் இருந்ததால், அதனை திமுக அரசு மூடிவிட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்தது.
இதன் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 7 பேர், சேலம் மாவட்டத்தில் மட்டும் 84 பேர் என ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிமுக அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று. ஆனால், 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை. எங்கும் ஊழல் தான் எதிரொலிக்கிறது" என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், சேலம் தெற்கு எம்எல்ஏ., பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில தலைவர் கதிர்வேலு, பொதுச்செயலாளர் ராமகவுண்டர் உள்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT