Published : 10 Aug 2023 09:36 PM
Last Updated : 10 Aug 2023 09:36 PM
சேலம்: மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய வழியின்றி கணவர் தவித்த நிலையில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முன்வந்து உதவியது கவனம் பெற்றுள்ளது.
சேலம், பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரையர். இவரது மனைவி லீலா( 68) உடல்நிலை சரியாமல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்திரையர் மனைவி லீலாவுக்கு ஈமகாரியம் செய்து, உடலை நல்லடக்கம் செய்ய வழியின்றி பரிதவித்தார். இதுகுறித்து அப்பகுதியின் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திடம், மனைவி உடலை அடக்கம் செய்ய வசதியில்லாத நிலையை எடுத்துக்கூறி கண்ணீர் விட்டார். மேலும், தனக்கு நண்பர்கள், உறவினர்கள் யாரும் இல்லாத ஆதரவற்ற நிலையில், வாழ்ந்து வருவதாகவும், மனைவியின் இறுதி காரியத்தை செய்ய உதவிட வேண்டினார்.
முதியவர் சந்திரயைரின் நிலையை கண்டு கருணை கொண்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம், உடனடியாக தனது சொந்த செலவில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்துக் கொண்டு, மூதாட்டி லீலாவின் உடலை பெற்றுக் கொண்டு, காக்காயன் மின் மயானத்துக்கு எடுத்துச் சென்றார். உடலை எரிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட ஈம காரியத்துக்கு தேவையான அனைத்து செலவுகளை மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் செய்து, கணவர் சந்திரையரின் குல வழக்கப்படி சடங்குகள் செய்து, உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார்.
சந்திரையரின் மனைவி லீலாவின் உடல் எரியூட்டும் வரை மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் உடன் இருந்து, தேவையான உதவிகளை செய்தார். மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் ஆரதவற்ற மூதாட்டியின் உடல் நல்லடக்கம் செய்ய மனிதாபிமானத்துடன் செயல்பட்டதை , பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT