Last Updated : 10 Aug, 2023 07:19 PM

 

Published : 10 Aug 2023 07:19 PM
Last Updated : 10 Aug 2023 07:19 PM

திருச்சி என்ஐடி நேரடி நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி என்ஐடியில் நேரடி பணி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சி என்ஐடி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் கீழ் நாடு முழுவதும் 31 என்ஐடிக்கள் (தேசிய தொழில்நுட்ப கழகம்) செயல்படுகின்றன. இதில் திருச்சி என்ஐடி முதலிடத்தில் உள்ளது. இங்கு இயக்குநர், துணை இயக்குநர், பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன. என்ஐடிக்களின் செயல்பாடுகள், பணி நியமனங்கள். பதவி உயர்வுகள் அனைத்தும் என்ஐடி மற்றும் அறிவியல் கல்வி ஆராய்ச்சி சட்டத்தின் கீழ் உள்ளது. இதன் கீழ் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் என்ஐடியின் கவர்னர் குழு கூடி முடிவு எடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இது தான் என்ஐடியின் நிர்வாக நடைமுறை.

இதன்படியே என்ஐடியின் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகள் இருக்கும். ஒரு நிலையில் உள்ள ஆசிரியர் அடுத்தடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற முடியும். இந்நிலையில் மத்திய கல்வித்துறை சார்பு செயலர், பதவி உயர்வு முறையை பின்பற்றாமல் அந்தந்த பதவிகளின் தகுதிக்கு ஏற்ப நேரடியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நேரடி நியமனம் மூலம் 64 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பதிவாளர் வெளியிட்டுள்ளார். இது என்ஐடி மற்றும் அறிவியல் கல்வி ஆராய்ச்சி சட்டத்துக்கு எதிரானது. எனவே, நேரடி நியமனம் தொடர்பான சுற்றறிக்கை மற்றும் பணி நியமன அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சட்டத்தின் படி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், சட்டத்தை மீறி ஒரு நடவடிக்கை எடுக்கும் போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த முறையை பின்பற்றாமல் நேரடி நியமனம் செய்வது என்பது ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நேரடி நியமனம் தொடர்பான சார்பு செயலரின் சுற்றறிக்கை என்ஐடி சட்டத்துக்கு எதிரானதாக உள்ளதால் ரத்து செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பின்படி வெளியான நேரடி பணி நியமன அறிவிப்பும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x